சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது – தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன் தகவல்

Posted On: 29 NOV 2022 3:46PM by PIB Chennai

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என்று இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன்  தெரிவித்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் அறிவுக் கூட்டாளியாக செயல்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அவர் சிறப்பு பேட்டியளித்தார். 1945-ஆம் ஆண்டு பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்த போது தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டதாக கூறினார். தமிழில் உள்ள சைவசித்தாந்தத்தையும் வடபுலத்துத் தத்துவ மரபுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பொருட்டுத் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

தற்போது இந்திய மொழிகள் துறையின் தமிழ்ப் பிரிவில் இளங்கலை, மொழிப்பாடம், முனைவர் பட்டம், தமிழ் பட்டயப் படிப்புகள் உள்ளன. வட இந்திய மற்றும் வெளி நாட்டு மாணவர்களுக்குத் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் பணியையும் இந்தத் தமிழ்ப் பிரிவு செய்துவருகிறது என்று அவர் தெரிவித்தார்.  

பேராசிரியர்கள் டி.பி. சித்தலிங்கையா, சிவராமன், மு.அருணாச்சலம் முதலிய புகழ்பெற்ற தமிழறிஞர்கள் இங்கு பணியாற்றியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது 1977-1978-ஆம் ஆண்டு மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தமிழ் இருக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டது.  

அண்மையில் மறைந்த பேராசிரியர் ந.அருணபாரதி இந்தப் பல்கலைக்கழகத்தில் 1977-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை நீண்டகாலம் பணிபுரிந்தார். தற்போது சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ந.சரவணன் இங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் 2007-ஆம் ஆண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 125-வது பிறந்த தினத்தையொட்டி மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தி அக்கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். இதுவரை தமிழ்ப் பிரிவில் ஐந்து பேர் ஒப்பிலக்கிய ஆய்வுத் தலைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

பாரதியின் 100-வது நினைவு நூற்றாண்டையொட்டி சென்ற ஆண்டு பாரதி ஆய்வு இருக்கை ஒன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக இந்திய மொழிகள் துறையில் அமைக்கப்பெறும் என்று பிரதமர் அறிவித்தார். தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பேராசிரியர் மற்றும் முதுநிலை ஆய்வாளருடன் அமையவுள்ள இந்த ஆய்விருக்கை, பாரதியின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தும். மேலும் பாரதியின் எழுத்துகளைப் பல்வேறு இந்திய, உலக மொழிகளில் மொழிபெயர்க்கவும் இன்னும் தொகுக்கப்படாத பாரதி படைப்புகளை தேடிச் செம்பதிப்புகளை வெளியிடும் பணிகளையும் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாகவியின் பங்களிப்பின் மீதான புதிய வெளிச்சம் பாயும் இந்நேரத்தில் பாரதி ஆய்விருக்கையின் பணிகள் கவனம் பெறும் என்று திரு ஜெகதீசன் தெரிவித்தார்.

***************

 

SM/SG/SMB/KPG/KRS


(Release ID: 1879763) Visitor Counter : 155