சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் முகாம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது
Posted On:
24 NOV 2022 4:47PM by PIB Chennai
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் குழு, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து, புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் இந்த முகாமுக்கு .இன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றதுடன், இந்த புதிய தொழில்நுட்பத்தால் அவர்கள் திருப்தியடைந்தனர்.
இந்த முகாமில் துறை அதிகாரிகள், ஓய்வூதியதாரர்களின் செல்ஃபோன் மூலம் முகஅங்கீகார செயலியை பதிவிறக்கம் செய்து, வாழ்நாள் சான்றிதழை பெற்று கொடுத்தனர். புதுச்சேரி ஓய்வூதியதாரர்கள் சங்கம், ஜிப்மர் ஓய்வூதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, இந்த முறை குறித்து அறிந்து கொண்டனர்.
கைபேசி வழியாக முக அங்கீகாரம் மூலம் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் செயல்பாட்டில், ஆதார் எண், ஒருமுறை கடவுச்சொல்லுக்கான (ஓடிபி) கைபேசி எண், ஓய்வூதியம் பெறுவதற்கு வழங்கப்பட்ட ஆர்டர் எண் மற்றும் வங்கி/அஞ்சலக கணக்கு எண் பற்றிய விவரங்கள் முதல் முறையாகத் தேவைப்படும். 60 விநாடிகளுக்குள் செல்ஃபோன் மூலமே வாழ்நாள் சான்றிதழை பெற முடியும்.
இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய பணியாளர் நலத்துறையின் அதிகார பூர்வ யூடியூப் அலைவரிசையான DOPPW_INDIA OFFICIAL என்ற அலைவரிசையை பார்க்கலாம் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முக அடையாள தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தது தொடர்பாக இந்த யூடியூப் அலைவரிசையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எளிய முறையில் புரிந்துகொள்ளும் வகையில், இரண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1.10.2022 முதல் இதுவரை டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள் (டிஎல்சி) தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 79,51,062. முக அங்கீகாரம் மூலம் டிஎல்சி தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 4,41,543. இந்தக் கால கட்டத்தில் டிஎல்சி தாக்கல் செய்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 27,43,324. இதில் முக அங்கீகாரம் மூலம் டிஎல்சி அளித்தவர்கள் 2,48,734 பேர்.
இந்த முகாம் நவம்பர் மாதம் முழுவதும் நடைபெறும். அனைத்து ஓய்வூதியதாரர்களும் முகஅங்கீகாரம் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்காக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
***************
SM/IR/KG/KRS


(Release ID: 1878575)
Visitor Counter : 126