தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மகிழ்ச்சிக்கான ஒரு தேடல்
கோவாவில், 53வது இஃப்பி-யில் கஜக்ஸ்தான் திரைப்படம் ஹேப்பினஸ் ( பாகித்) திரையிடப்பட்டது
அவள் மகிழ்ச்சியின் முகமூடியை அணிந்திருக்கிறாள், ஆனால் அவள் உள்ளே ஓர் ஆழமான ரகசியத்தை மறைத்திருக்கிறாள்!
குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க ஒரு பெண் என்ன இழக்க வேண்டும்?
பெண் வெறுப்பின் தளைகளை உடைக்க ஒரு பெண் என்ன விலை கொடுக்க வேண்டும்?
அஸ்கர் உசாபயேவின் இயக்கத்தில், மகிழ்ச்சி மற்றும் கண்ணியம் தேடும் ஒரு பெண்ணின் பயணத்தை சித்தரிக்கிறது ‘ஹேப்பினஸ்’ (மகிழ்ச்சி) என்று பெயரிடப்பட்ட திரைப்படம். இயக்குனர் அஸ்கர் உசாபயேவின் முந்தைய படங்களில் பெரும்பாலானவை நகைச்சுவை நாடகங்கள், ஆனால் முதல் முறையாக அவர் குடும்ப வன்முறை போன்ற உணர்ச்சிகரமான பிரச்சனையைப் படமாக்க முயற்சி செய்துள்ளார். இது பார்வையாளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறது.கோவாவில், 53வது இஃப்பி-யில், இன்று,பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ எனும் உரையாடல் நிகழ்வில் பேசிய இயக்குனர், "நாம் வன்முறைகளின் உலகில் வாழ்கிறோம்" என்றார்.
திரைப்படத்தின் முக்கிய கருப்பொருளான குடும்ப வன்முறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இயக்குனர் அஸ்கர் உசாபயேவ், சமூகத்தில் குடும்பம் ஒரு முக்கியமான நிறுவனம் என்றும், தலைமுறைகள் கடந்து வரும் சமூகப் பிரச்சினைகளைத் தடுப்பதில் அது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் கூறினார். "இது உண்மையில் ஒரு தீய சுழற்சி. இந்த இடைவிடாத பிரச்சனைகள் தங்கள் குடும்பங்களில் பெண்களால் எழுப்பப்படுகின்றன. நமது சமூகத்தில் இது போன்ற தீமைகளைத் தடுக்க வேண்டியது காலத்தின் தேவை,'' என்றார். கஜக்ஸ்தானில் பெண்களின் நிலைமை குறித்து கேட்டதற்கு, குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிக பலம் பெண்களுக்கு இருப்பதாக இயக்குனர் குறிப்பிட்டார். சமூகம் பெண்களை நம்பியுள்ளது, ஆனால் அதே நேரத்தில் பாலின சமத்துவம் ஆணாதிக்க சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த உரையாடலில் கலந்து கொண்ட இணை தயாரிப்பாளர் அன்னா கட்ச்கோ, திரைப்படத்தைப் பார்த்த பிறகு தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ள தன்னை அணுகிய பெண்களின் எண்ணிக்கையால் தாம் ஆச்சரியமடைந்ததாகக் கூறினார். ‘கதையும் வசனமும் மக்களை மையப்படுத்தி பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும். சமூக தாக்கம் அதிகம் உள்ள படங்களை உருவாக்குவது எனக்கு மிகவும் முக்கியம்,'' என்றார். 'மகிழ்ச்சி' திரைப்படம் தனது நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
**************
SRI/ SMB / DL
(Release ID: 1878388)