சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பொறியியல் மற்றும் அறிவியல் முதுநிலை பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்பாக்கம் அணுஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது

Posted On: 26 OCT 2022 5:27PM by PIB Chennai

அணு அறிவியல் மற்றும் எந்திரவியல், வேதியியல், அதிவேக உலை தொழில்நுட்பம், மின்னணு உட்பட ஆறு பொறியியல் துறைகளில் ஓராண்டு புத்தாக்கம் மற்றும் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி  அணுஆராய்ச்சி மையத்தில்  பட்டமளிப்பு விழா 2022 அக்டோபர் 26 அன்று நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய அணு ஆராய்ச்சி மையத்தின்  இயக்குநரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான பேராசிரியர் பி வெங்கட்ராமன், 1950 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் 3 நிலையிலான அணுசக்தித் திட்டத்திற்கு அடித்தளமிட்ட டாக்டர் ஹோமி பாபாவின் தொலைநோக்கு பார்வையை பாராட்டினார்.  கார்பைட்  எரிபொருளை பயன்படுத்தி அதன் சுழற்சியை வெற்றிகரமாக நிறுத்தும் திறன் கொண்ட ஒரேநாடாக இந்தியா விளங்குவது பெருமைக்குரியது என்று அவர் கூறினார்.  பயிற்சி பெற்ற அதிகாரிகள் தங்களின் முயற்சிகளில் வெற்றி அடைவதற்கு சிறந்த, ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு திரு வெங்கட்ராமன் அறிவுறுத்தினார்.

தொழில்முறை வளர்ச்சி மற்றும் பயிற்சிக்கான மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எம் சாய்பாபா இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு கவுரவமிக்க ஹோமி பாபா பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.  2021-2022 கல்வி ஆண்டுக்கான விழா மலரையும் வெளியிட்டார். 

விழாவில் வரவேற்புரையாற்றிய பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளி தலைவர் டாக்டர் வித்யா சுந்தர்ராஜன், கடந்த 16 ஆண்டுகளில் 570 பயிற்சியாளர்கள் பட்டம் அணுசக்தித் துறையின் பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த பயிற்சித் தொகுப்பில் ஒட்டுமொத்த முதன்மை நிலையை பெற்ற குஷ்பூ வர்ஷினி ஹோமி பாபா பதக்கம் பெற்றார்.  விழா நிறைவில் பொறியியல் மற்றும் அறிவியலுக்கான புத்தாக்கப் பயிற்சிப் பிரிவின் தலைவர் டாக்டர் என் மதுரை மீனாட்சி நன்றி தெரிவித்தார்.  

    

***************


(Release ID: 1871015) Visitor Counter : 139
Read this release in: English