சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தோல் துறை சந்திக்கும் நீண்டகால சவால்களுக்கு தீர்வாக அமையும் சி.எஸ்.ஐ.ஆர்-சி.எல்.ஆர்.ஐ நிறுவனத்தின் தயாரிப்புகள்

प्रविष्टि तिथि: 14 OCT 2022 2:48PM by PIB Chennai

தோல் துறையின் மிகப்பெரிய சுமையாகக் கருதப்படும் சுகாதாரமான குரோம் பதனிடுதல் செயல்முறைக்குத் தீர்வு காண்பதற்காக அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.ஆர்.ஐ) புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது. நீரில்லா குரோம் பதனிடும் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை குரோமியமால் ஏற்படும் மாசை முற்றிலும் தடுக்கிறது.

இந்த முறையின்படி தண்ணீர் மற்றும் புதிய ரசாயனம் அல்லது பொருட்கள் ஏதும் சேர்க்காமல் பதனிடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த செயல்முறையில் குரோமியம் வெளியேற்றப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் அதே வேளையில், தோலின் தரம் சிறிதும் குறைவதில்லை. இதனால், பொருளாதாரம் பயனடைவதோடு, ஆற்றல், நேரம் மற்றும் தண்ணீர் முதலியவை 20% சேமிக்கப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு இதுவரை சுமார் 125 தோல் உற்பத்தியாளர்கள் உரிமம் பெற்றுள்ளனர். மேலும் 40 பேரை ஈடுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த செயல்முறையால் வருடந்தோறும் சுமார் 100 மில்லியன் லிட்டர் நீர் வளம் பாதுகாக்கப்படுகிறது. இது தவிர, 1200 டன் குரோமியம் வெளியேறுவதையும், 4500 டன் உப்பு, நீர் நிலைகளில் கலப்பதையும் தடுக்க முடிகிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக, புரதம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட கழிவுகளை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கான நிலையான தொழில்நுட்பங்களை சி.எஸ்.ஐ.ஆர்-சி.எல்ஆர்.ஐ உருவாக்கியுள்ளது. புரதத்தை அடிப்படையாகக் கொண்ட மறு பதப்படுத்தும் முகமையாக இந்த கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தத் தயாரிப்பு, குரோம் பதனிடுவதற்கான முகமையாகவும் பயன்படுகிறது. எனவே, சுழற்சி பொருளாதார மாதிரியாக, தோல் துறையில் இருந்து வெளியேறும் திட கழிவுகள் அந்தத் துறையினாலேயே மீண்டும் பயன்படுத்தக் கூடிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன.

இந்த தகவல், சென்னை சி.எஸ்.ஐ.ஆர்-சி.எல்.ஆர்.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***************

 


(रिलीज़ आईडी: 1867720) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English