சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ் ப்ரவர்த்தக் ஃபவுண்டேஷன் வங்கி மற்றும் நிதி தொடர்பான திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையைத் தொடங்கி உள்ளது

Posted On: 10 OCT 2022 12:11PM by PIB Chennai

Ø வங்கி மற்றும் நிதிச்சேவைகளில் பணிவாய்ப்புக்காக மாணவர்களைத் தயார்படுத்த 7 படிப்புகள் உள்ளன

Ø மியூச்சுவல் பண்ட், ஈக்விட்டி டெரிவேட்டிவ், டிஜிட்டல் பேங்கிங், செக்யூரிட்டீஸ் ஆபரேஷன், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் போன்றவற்றில் பணிவாய்ப்புகளுக்கு மாணவர்களை அவர்கள் தயார்படுத்துகின்றனர்

Ø NISM, NSE, BSE, IIBF போன்றவற்றால் நடத்தப்படும் சான்றிதழ் தேர்வுகளை நம்பிக்கையுடன் கையாளும் வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்

சென்னை, 10 அக்டோபர் 2022: ஐஐடி மெட்ராஸ்-ன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையமானஐஐடிமெட்ராஸ்ப்ரவர்த்தக்ஃபவுண்டேஷன்,  வங்கி, நிதி ஆகிய துறைகளில் மாணவர்களை பணிவாய்ப்புக்குத் தயார்படுத்தும் வகையில் தொழில்துறை தொடர்பான திறன்மேம்பாட்டுப் படிப்புகளை வழங்குகிறது.

ஐஐடி மெட்ராஸ்-ன் முன்முயற்சி அமைப்பான டிஜிட்டல்ஸ்கில்ஸ்அகாடமி(Digital Skills Academy), சென்னையில்நிதித்துறை சான்றளிக்கப்பட்ட முதன்மைப் பயிற்சியாளரான இன்ஃபேக்ட்ப்ரோ (InFactPro)வுடன் இணைந்து இந்தப் படிப்புகளை வழங்குகின்றன. திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் வங்கி மற்றும் நிதிச்சேவைகள், காப்பீட்டுத் துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து இன்ஃபேக்ட்ப்ரோ பயிற்சிகளை அளித்து வருகிறது.

வங்கித் துறையில் பணிவாய்ப்பை உருவாக்கிக் கொள்ள மாணவர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 30 லட்சம் பேர் வெவ்வேறு வங்கித் தேர்வுகளை எழுதிவரும் நிலையில், அதில் 0.5 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை இருந்து வருகிறது. இந்த மாணவர்களைப் பொறுத்தவரை திறன் மேம்பாட்டைப் பெறத் தயாராக இருந்தால் நிதி மற்றும் வங்கித் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அடுக்கு 2, அடுக்கு 3 நகரங்களில் வங்கி மற்றும் நிதிச்சேவைகளுக்கான தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் இதுபோன்ற நகரங்களில் பயிற்சி வல்லுநர்களுக்கான தேவைகளும் இயற்கையாகவே அதிகரித்து வருகின்றன. இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, பாடத் திட்டம் போன்றவை குறித்த கூடுதல் விவரங்களை பின்வரும் இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் - https://iit.infactpro.com or https://skillsacademy.iitm.ac.in

பாடப்பிரிவுகளை வழங்கிவரும் குழுவுக்குப் பாராட்டுத் தெரிவித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநரும், ஐஐடி மெட்ராஸ் ப்வர்த்தக் ஃபவுண்டேஷன் தலைவருமான பேராசிரியர் வி.காமகோடி அவர்கள் கூறுகையில், "கல்வி என்பது தொடர்ச்சியானதொரு செயல்முறையாகும். மாணவர்களும், தொழில் வல்லுநர்களும் தங்கள் அறிவையும் ஆற்றலையும் தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு பணியில் போட்டித்  தன்மைக்குத் தயார்நிலையில் இருக்க வேண்டும். கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறையாகும். நம் நாட்டின் அனைத்துப் பகுதிகள் அதிலும் குறிப்பாக டிஜிட்டல் கற்றறிவு மிகக் குறைந்த தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பணிவாய்ப்பைத் தேர்வு செய்துகொண்டு முன்னோக்கிச் செல்ல இந்தப் படிப்புகள் உதவிகரமாக இருக்கும்" எனக் குறிப்பிட்டார்.

பேராசிரியர் காமகோடி அவர்கள் மேலும் கூறும்போது, "நம் நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு விரைந்து செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற திறன் மேம்பாட்டுப் படிப்புகளை முதன்மையான கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் இணைந்து வழங்கி, வங்கி மற்றும் நிதித்துறையில் பணிவாய்ப்புகளை விரும்பும் மாணவர்களுக்கு உதவிட வேண்டும்" என்றார்.

இளங்கலைப் பட்டப்படிப்பு படிப்பவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் திறமையை வெளிப்படுத்த ஆர்வம் இருப்போர் இந்த சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு தகுதி உடையவர்கள். இந்த சான்றிதழ் படிப்புகளை எடுத்துப் படிக்கும் மாணவர்கள் NISM, NSE, BSE, IIBF நடத்தும் பல்வேறு சான்றிதழ் தேர்வுகளை எழுதலாம்.

இந்தப் படிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் (CODE) டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.மங்கல சுந்தர் கூறுகையில், "வங்கி, நிதிச்சேவை மற்றும் காப்பீடுத் துறையில் அண்மைக்கால தொழில்நுட்ப முன்னேற்றம், டிஜிட்டல் முறையில் கையாளுதல் போன்ற காரணங்களால் சரியான திறன்களைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள்மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். வங்கி, நிதி, காப்பீடு துறைகளில் நிபுணத்துவம் பெற கல்லூரிகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். வங்கி, நிதி, மியூச்சுவல் பண்ட், ஈக்விட்டி டெரிவேடிவ்ஸ், டிஜிட்டல் பேங்கிங், செக்யூரிட்டீஸ் ஆபரேஷன்ஸ், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் போன்றவை தொடர்பாக ஆழமான புரிதலை இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் வழங்குகின்றன. ஐஐடி மெட்ராஸ் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி, ஐஐடிஎம் ப்ரவர்த்தக்குடன் இணைந்து தொழில்துறை தொடர்பான திறன்களை கற்றுக்கொடுப்பதுடன் ஆண்களையும், பெண்களையும் வங்கி, நிதிச்சேவை மற்றும் காப்பீடு துறைகளில் வேலைவாய்ப்பை கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

தொழில் மற்றும் கல்வித் துறைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்த சில ஆசிரியர்களால் இந்தப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித்துறை தலைவரும், இந்தியப் பங்குகள் பரிவர்த்தனை வாரியத்தால் (SEBI) உருவாக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான பேராசிரியை எம்.தேன்மொழி  'பிரீமியர் பேங்கர்' என்ற படிப்பிற்கு முதன்மை ஆசிரியராக உள்ளார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வங்கிகளில் அனுபவம் பெற்ற ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் முன்னாள் துணைத் தலைவரான டாக்டர் பாலாஜி அய்யர் பல்வேறு படிப்புகளுக்கு இணை ஆசிரியராகப் பணியாற்ற உள்ளார்.

'நாஸ்காம் ஐடி-ஐடிஇஸ் செக்டர் ஸ்கில்ஸ் கவுன்சி'லின் மிகத் திறமையான வழிகாட்டுதலுடன், ஐஐடி மெட்ராஸ்-ன் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி (DSA) கடந்த 2018ம் ஆண்டு முதல் 25-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு ஆன்லைன் பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது.

காக்னிசன்ட் டெக்னாலஜி சொலூசன்ஸ் நிறுவனர்- தலைமைச் செயல் அலுவலரான திரு. லட்சுமி நாராயணன், ஐஐடி மெட்ராஸ் முன்னாள் இயக்குநரும், என்பிடெல் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் ஆன்லைன் கற்றலை உருவாக்கியவருமான பேராசிரியர் எம்.எஸ்.ஆனந்த் ஆகியோர் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமிக்கு தலைமை வகிக்கின்றனர். ஐஐடி மெட்ராஸ்-ன் டிஜிட்டல் கல்வி மையத்தால் (Centre for Outreach and Digital Education- CODE) இது நடத்தப்பட்டு வருகிறது.

###


(Release ID: 1866395)
Read this release in: English