சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தூய்மையான கடற்கரை:பாதுகாப்பான கடல்

Posted On: 27 AUG 2022 6:30PM by PIB Chennai

இந்தியாவின் 7500 கிலோ மீட்டர்  நீண்ட கடற்கரையானது, அதிகமான கடல் வளங்களுடையது. ஒரு நாட்டின் பெயரால் அமைந்துள்ள பெருங்கடல் என்பது இந்தியப் பெருங்கடல் மட்டுமே.

கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில்  பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இது ஒரு சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்குகளின் பாதிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தனை ஆய்வுகளிலும், கடல் சூழலை  பிளாஸ்டிக்குகள்  பாதிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். கடலில் வாழும் மீன்கள் பாதிப்படைகின்றன, அதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது . மேலும், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் அதிக அளவில் கடலில் சென்று சேர்வதால், கடல் சூழலியல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

 ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட் டுள்ளது. இதனையடுத்து கடல் தூய்மை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  தூய்மை இந்தியா திட்டத்தின் படி பல பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.  இம்மாதிரியான நடவடிக்கைகள் மூலம் கடலிலும், கடற்கரையொட்டி உள்ள பகுதிகளிலும் மாசுபாடு ஏற்படாமல் நாம் தடுக்க முடியும். நிலைத்த வளர்ச்சி  இலக்கு 14 ஒரு முக்கிய அம்சமாகும். இதில் 14.1 இன் படி வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் கடலை பாதிக்கும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளையும் குறைப்பது,  மேலும் நிலப் பகுதியில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைத்து, கடலில் குப்பைகள் சேரா வண்ணம் பாதுகாப்பது அவசியம்.  பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம், செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. " தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்" என்ற முழக்கத்துடன் இந்தியாவின் அனைத்து கடற்கரைகளையும் சுத்தப்படுத்துவது என்ற இலக்குடன் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் போது,  எப்படி கடலில் குப்பைகள் சேருகின்றன என்ற அறிவியல் பூர்வமான தரவுகள் தொகுக்கப்படும்.  இந்தக் குப்பை கழிவுகளால் எப்படி கடல் நீர் பாதிப்படைகிறது என்பதுடன் அதில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் குறித்தும் தூய்மையான கடற்கரை பகுதி குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

இந்தப் பிரச்சாரத்தில் மத்திய அரசின் புவியியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு காலநிலை மாற்றம் அமைச்சகம், நாட்டு நலப் பணித்திட்டம், இந்திய கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  உள்ளிட்ட அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்த ஆண்டு நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், 75 கடற்கரையோரங்களில்   ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 75 தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக 75 கடற்கரைகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன.

தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற நோக்குடன் மக்கள் பிரச்சாரம்  75 நாட்கள் நீடிக்கும்.  இதன் மூலம் இந்தியாவில் கடலும்,  கடற்கரையும் தூய்மையானதாக மாறும்.  இதற்கான பிரச்சாரம் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நமது கடல் மற்றும் அதன் சுற்றுசூழலை நாம் பாதுகாக்கும் வகையில்,

தேவையான பொருட்களை மட்டும் வாங்குவோம், வீட்டில் தேவையற்ற குப்பைகளை ஒதுக்கிவைப்போம். இந்த குப்பைகளை பத்திரமாக அதற்கான இடத்தில் கொட்டுவோம்.

மாபெரும் தூய்மையான கடற்கரை பிரச்சாரம் என்பது, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் . இந்த நிகழ்வில் அன்றைய தினம் 7500.கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை மேலும் தூய்மை பெறும்.

கடலின் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்க கூடிய  நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதுடன், எப்படி குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலின் சமநிலையை, கடலின் காலநிலையையும் பாதிப்பதை எடுத்துரைக்கிறது. ஆகஸ்ட் மாதம்  இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரத்தை எடுத்துச் சென்று பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு ஏற்படும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செப்டம்பர் மாதம் செயலில் இறங்கி மக்களை ஒன்று திரட்டி குப்பைகளை அகற்றுவதும் நடைபெறும்.

பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி ஏற்பது இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம் ஆகும்.  உள்ளூர் சமூகத்தை ஒன்று திரட்டி கடற்கரையும், கடலும் நம்முடைய வாழ்வாதாரத்திற்கு எப்படி உறுதுணை புரிகிறது என்பதை உணர்த்துவது, குறிப்பாக பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.  கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சார இயக்கமானது, நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் நடத்தப்படும். சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் இடத்தில் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.

காணொலி வாயிலாக வினாடி-வினா நிகழ்ச்சிகள், உறுதி ஏற்புகள், பிளாஸ்டிக்கால் எற்படும் சவால்கள் குறித்து விவாதிக்கப்படும்.  கடற்கரையோரங்களுக்குச் சென்று சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வு பிரச்சார பேரணிகள், சிறு நாடகங்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும்.

இந்த பிரச்சாரத்திற்காக "ஈக்கோ மித்ரம்" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள் , வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கடற்கரையோர தூய்மைப் படுத்தும் நிகழ்வில் தன்னார்வமாக பணியாற்ற பதிவு செய்து கொள்ளலாம்.

உலகிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது. இது போன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலமாக பொதுமக்களிடம் எப்படி பிளாஸ்டிக்குகள் நம்முடைய கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கின்றன என்பதை உணர்த் துவதும், அதன் மூலமாக அவர்களின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

***** 

  


(Release ID: 1854857) Visitor Counter : 932


Read this release in: English