சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஐஐடி-யில் சேர விரும்புவோரை இலக்காகக் கொண்டு 'AskIITM' இணையதளத்தை ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் தொடங்கி உள்ளனர்.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வேலைவாய்ப்புகள் தொடங்கி, வளாக வசதிகள் வரை இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை AskIITM.com இணையதளத்தில் பதிவிடுவோருக்கு 48 மணி நேரத்திற்குள் இமெயில் அல்லது வாட்ஸ்அப் மூலம் முன்னாள் மாணவர்கள் பதில் அளிப்பார்கள்.

Posted On: 26 AUG 2022 6:39PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்கள் AskIITM.com என்ற இணையதளத்தைத் தொடங்கி உள்ளனர். ஐஐடியில் சேரவிரும்புவோர் நேரடியாக அணுகும் வகையில், வேலைவாய்ப்பு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடங்கி வளாக வசதிகள் வரை ஐஐடி மெட்ராஸ் தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு பதில்களைப் பெறலாம்.

ஐஐடி மெட்ராஸ்-ல் சேர விரும்புவோருக்கு உதவும் நோக்கில் முன்னாள் மாணவர்களின் முன்முயற்சியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள்www.askiitm.com என்ற இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ அல்லது தாங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம்.

இந்த இணையதளம் இன்று (26 ஆகஸ்ட் 2022) தொடங்கப்பட்டு உள்ளது. இதில் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:

  • ஐஐடி மெட்ராஸ் மின்சார வாகனத் தொழில்நுட்பத்தின் மையம் என்பது உண்மையா?
  • தேசியக் கல்வி நிறுவனத் தரவரிசையில் (NIRF) தொடர்ந்து 4 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைக்கும் வகையில் ஐஐடி மெட்ராஸ்-ன் செயல்பாடுகள் என்னென்ன?
  • ஹாஸ்டல் வசதிகள், ஹாஸ்டல் மெஸ் உணவு தொடர்பானவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள்

இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜேஇஇ தேர்வர்களுக்கு அழைப்பு விடுத்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பேசுகையில்."விருப்பமுடைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்குச் சென்று தகவல்களைத் தேடுகிறார்கள். ஆனால் அங்கு கிடைக்கும் தகவல்களோ குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவலைப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறந்த இக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் AskIITMமூலம் ஆர்வமுடன் பதில் அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. ஐஐடி மெட்ராஸ் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்விக்கும் இது ஒரு தொடக்கப் பயணமாக அமையும் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை எவரும் கேட்க இணையதளத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவால் அக்கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும். கேள்வி கேட்போருக்கான பதில் இமெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ வழங்கப்படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அக்கேள்விகள் இடம்பெறும்.

இந்த முன்முயற்சி குறித்துப் பேசிய பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்பு),ஐஐடி மெட்ராஸ் கூறுகையில், "எங்கள் முன்னாள் மாணவர்கள்தான் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கச் சிறந்தவர்கள். ஏனெனில் இக்கல்வி நிறுவனத்தில் படித்து, பட்டப் படிப்பு முடித்தபின் வேலைவாய்ப்பையும் நேரடியாகப் பெற்றவர்கள் அவர்கள்" என்றார்.

AskIITM-யின் ஒரு முயற்சியாக, சென்னை, ஐதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் 2022 செப்டம்பர் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஜேஇஇதேர்வு எழுதுவோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் இயக்குநர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பலாம். 2022 செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில், கல்விநிறுவன வளாகம் மற்றும் பல்வேறு துறைகளை மெய்நிகர் முறையில் காணமுடியும். வரவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியில் அணுகலாம்:https://www.askiitm.com/events

AskIITM-ஐ பின்னணியில் இருந்து வழிநடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் திரு.அம்ருதாஷ் மிஸ்ரா கூறும்போது,"தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் எளிதில் அணுகும் வகையில் இணையதளம் வடிமைக்கப்பட்டு உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கான படைப்பாற்றல் இயக்குநரான திரு.அம்ரித்வத்சா மேலும் கூறுகையில்," ஐஐடியில் நேரடியாக அனுபவம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில், இதில் நுழைய விரும்புவோருக்கு நம்பகமான பதில்களை AskIITMமூலம் அளிக்க முடியும் என நம்புகிறோம்"என்றார்.

###



(Release ID: 1854713) Visitor Counter : 129


Read this release in: English