சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி பொதிகை தொலைக்காட்சி சார்பில் ஸ்வராஜ் தொடர்

प्रविष्टि तिथि: 18 AUG 2022 1:56PM by PIB Chennai

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக   விடுதலை போராட்ட வீரர்களின் முழுமையான வரலாற்றை "ஸ்வராஜ்" என்ற தலைப்பில் 75 வாரங்களுக்கு தொலைக்காட்சி தொடர் ஒன்றினை தூர்தர்ஷன் ஒளிபரப்ப உள்ளது.

வரும் 20-ஆம் தேதி முதல் 75 வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் பொதிகையில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தமிழில் HD தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சி திங்கட்கிழமை தோறும் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமை மாலை 4 மணிக்கும், வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கும் மறு ஒளிபரப்பு  செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. அண்ணாதுரை, சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் தலைவர் திரு. கிருஷ்ணதாஸ், செய்தி பிரிவின் இயக்குநர் திரு. குருபாபு பலராமன், நிகழ்ச்சி பிரிவின் தலைவர்  திரு. ரஃபீக் பாட்ஷா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

அப்போது பேசிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு.அண்ணாதுரை, மொத்தம் 75 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த தொலைக்காட்சி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அறியப்படாத 75 விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்றார்.

மேலும், தமிழகத்தில் இருந்து பூலித்தேவன், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய வீரர்களின் வரலாறு இந்த தொடர்களில் ஒளிபரப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

செய்தியாளர்  சந்திப்பில் பேசிய திரு. ரஃபீக் பாட்ஷா, விடுதலைப் போரில் தமிழகம் ஆற்றிய பங்கு குறித்து தனி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பும் பணிகளில் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிலையம் ஈடுபட்டு உள்ளதாகவும், அது விரைவில் தொடராக வெளிவரும் என்றும் கூறினார்.

செய்தி பிரிவின் இயக்குநர் திரு.குருபாபு பலராமன் பேசுகையில், நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் பொதிகை தொலைக்காட்சியின் செய்தி பிரிவு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

விடுதலைப் போராட்டம் குறித்தும், வரலாற்று சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் தூர்தர்ஷனின் youtube தளத்தில் காணலாம் என்று பொதிகை தொலைக்காட்சி நிலைய தலைவர் திரு.கிருஷ்ணதாஸ் தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி அவரது தபால்தலையை வெளியிடும் நிகழ்ச்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெறுகிறது என்றும், இதில் தமிழக ஆளுநர் திரு.ஆர் என் ரவி தபால்தலையை வெளியிட  தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்பெற்றுகொள்கிறார் என்றும், இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புதுறை இணை அமைச்சர் திரு. தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் திருநாராயணசாமிதகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் கூடுதல் தலைமை இயக்குனர்  திரு. மா. அண்ணாதுரை தெரிவித்தார்.

மேலும், பாளையங்கோட்டையில் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த 10 நாள் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.

****


(रिलीज़ आईडी: 1852831) आगंतुक पटल : 1310
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English