சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஐஐடி மெட்ராஸ் 'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை தொடங்கியுள்ளது

Posted On: 28 JUL 2022 3:05PM by PIB Chennai

இந்திய மொழித் தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தி சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், 'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) தொடங்கியுள்ளது. ரோஹினி மற்றும் நந்தன் நீலேகனி ஆகியோர் நீலேகனி தொண்டு நிறுவனம் மூலம் இம்மையத்திற்கு தாராள நிதியுதவியாக ரூ.36 கோடி வழங்கியுள்ளனர்.

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் புதிய மையம் செயல்படும். ஐஐடி வளாகத்தில் இன்று (28 ஜூலை 2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு. நந்தன் நீலேகனி அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். தொடக்க நிகழ்வாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் பங்கேற்ற பயிலரங்கில் இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய 'ஓபன் சோர்ஸ்' மொழியைக் கட்டமைக்கும் ஐஐடி மெட்ராஸ்-ன் முன்முயற்சியாகவே ஏஐ4பாரத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, டாக்டர் மிதேஷ் கப்ரா, டாக்டர் பிரத்யுஷ் குமார், டாக்டர் அனூப் குஞ்சுக்குட்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்திய மொழித் தொழில்நுட்பத்திற்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இயந்திர மொழிபெயர்ப்பு (Machine Translation), தானியங்கிப் பேச்சு அறிதல் (Speech Recognition) போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும்.

மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு. நந்தன் நீலேகனி, "கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவர் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 'டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்' தொடங்கப்பட்டு உள்ளது. இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.

'ஏஐ4பாரத் நீலேகனி மைய'த்தை உருவாக்கிய குழுவினரை வாழ்த்திப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "இந்திய மொழிக்கான செயற்கை நுண்ணறிவுப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த்தாகும். இதில் ஐஐடி மெட்ராஸ் தலைமை வகித்துச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏஐ4பாரத் மையத்தின் அதிநவீன ஆராய்ச்சிகள் உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் நாளை எதிர்பார்க்கிறேன்" என்றார்.

நீலேகனி மையத்தின் பணிகள் குறித்து விவரித்த ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் மிதேஷ் எம்.கப்ரா கூறியதாவது: "வளமான பன்முகத்தன்மை கொண்ட மொழிகளைக் கொண்ட இந்தியாவில், விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப சாமானிய மக்கள் பயனடையும் வகையில் மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். மொழித் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமும், மேலும் சில மொழிகளும் கணிசமான அளவில் முன்னேறியுள்ள நிலையில், இந்திய மொழிகள் பின்தங்கி உள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதுதான் இந்த மையத்தின் நோக்கமாகும்."

இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன 'ஓபன் சோர்ஸ்' வளங்கள் எவரும் பயன்படுத்தக் கூடியவையாகும். இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை பின்வரும் இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.(https://ai4bharat.iitm.ac.in/).

இம்மையம் குறித்து விரிவாகப் பேசிய ஐஐடி மெட்ராஸ், மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் மற்றும் பகுதிநேர ஆசிரியரான ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரத்யுஷ்குமார், "கல்வித்துறை, தொழில்துறை மற்றும் பொது நலனுக்காகப் பணியாற்றும் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து பணியாற்றும் இடமாக இந்த மையம் அமைந்துள்ளது. அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, திறந்த தரவுத் தொகுப்புகளைக் கொண்ட உள்கட்டமைப்பு, மக்களுக்கான பயன்பாட்டு மென்பொருள் எனப் பரந்த அடிப்படையில் பங்களிப்பை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மையத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியாளர் டாக்டர் அனூப் குஞ்சுக்குட்டன் பேசும்போது, "வெவ்வேறு இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்க மிகுந்த பொருட்செலவு ஏற்படுவதுடன் பெரிய அளவிலான தரவுத் தொகுப்புகள் (datasets) மற்றும் கணினி சக்தி (compute power) போன்றவையும் தேவைப்படும். இந்த சூழலில், செயற்கை நுண்ணறிவு 'ஓபன் சோர்ஸ்'களை கட்டமைக்க ஆதரவை நல்கிய பல்வேறு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

.கே.ஸ்டெப் பவுண்டேஷனின் தலைமை செயற்கை நுண்ணறிவு நிபுணரும், மையத்தின் வழிகாட்டியுமான டாக்டர் விவேக்ராகவன் கூறியதாவது: "சமூகத்திற்கு பரந்த அளவில் பயனளிக்கும் வகையில் அடித்தளப் பணிகளைச் செய்வதில் இந்த மையம் கவனம் செலுத்தும். இங்கு உருவாக்கப்படும் தரவுத் தொகுப்புகள், கருவிகள், முன்பயிற்சி மாதிரிகள் போன்றவற்றை இந்திய மொழித் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் தொடக்க நிறுவனங்கள், இதர தொழிலகங்கள் பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறோம். இந்திய மொழிகளுக்கு இன்னும் ஏராளமான பணிகளை ஆற்றும் சுற்றுச்சூழலை உற்சாகப்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

                                                                                                                                    ****


(Release ID: 1845808) Visitor Counter : 187


Read this release in: English