ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறித்துறை மற்றும் நெசவாளர்களின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
Posted On:
20 JUL 2022 4:23PM by PIB Chennai
நாடு முழுவதும் கைத்தறித்துறையை ஊக்குவிக்கவும், நெசவாளர்களின் நலனை மேம்படுத்தவும், தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டம், மூலப்பொருள் விநியோகத்திட்டம் ஆகியவற்றை மத்திய ஜவுளி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் தகுதியுள்ள கைத்தறி முகமைகள், நெசவாளர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. மூலப்பொருட்கள் வாங்குவதற்கும், பொது உள்கட்டமைப்பு மேம்பாடு, கைத்தறி உற்பத்தி பொருட்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துதல் சலுகை விகிதத்தில் கடன்கள் வழங்குதல், நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைத்தறி தொழிலாளர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தற்சார்பு இந்தியா இயக்கத்தின் மூலம் சிறப்பு பொருளாதார சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளரவும், நாடு தன்னிறைவு பெறவும் வழி ஏற்படும். பல்வேறு துறைகளுக்கான நிவாரண மற்றும் கடனுதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தகுதியுள்ள நெசவாளர்கள் மற்றும் கைத்தறி நிறுவனங்கள் தங்கள் தொழிலை புதுப்பித்துக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்க மாநில கைத்தறி கழகங்கள், கூட்டுறவு சங்கங்கள், முகமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் இல்லை. இருப்பினும் தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தின் ஒருபகுதியாக சூரியசக்தி விளக்குகளை கொண்ட அலகுகள் வழங்கப்படுகின்றன.
மக்களவையில் ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1843081)
(Release ID: 1843127)
Visitor Counter : 309