சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வேளாண் கழிவுகளை தொழில்துறை நொதிகளாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாகவும் மாற்றுவதற்கான, செயல்முறையை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது

Posted On: 04 JUL 2022 1:08PM by PIB Chennai

குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் வேளாண் கழிவுகளை தொழில்துறை நொதிகளாக மாற்றும் பாக்டீரியாவை, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜவுளி, காகிதம், டிடர்ஜென்ட் சோப்பு, மருந்துப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆல்ஃபா-அமைலஸ் (alpha-amylase), செல்லுலாஸ் (cellulase) போன்ற தொழில்துறை நொதிகளுக்கு அதிகளவில் கிராக்கி இருந்து வருகிறது. வேளாண் கழிவுகளில் இருந்து தொழில்துறை நொதிகள் மற்றும் மதிப்புக் கூட்டுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய 'பேசிலஸ் எஸ்பி பிஎம்06' (Bacillus sp PM06) எனப்படும் பாக்டீரியா எவ்வாறு உதவுகிறது என்பதை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஐஐடி மெட்ராஸ்-ன் உயிரி தொழில்நுட்பத்துறை ஆசிரியரான பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மடி, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவியான ரேகா ராஜேஷ் ஆகியோர் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற முடிவுகள் புகழ்பெற்ற ஆராய்ச்சி மதிப்பாய்வு இதழான பயோமாஸ் கன்வர்சன் அண்ட் பயோரிஃபைனரி-யில் (Biomass Conversion and Biorefinery) (https://doi.org/10.1007/s13399-022-02418-z) வெளியிடப்பட்டு உள்ளன.

ஆராய்ச்சியின் முக்கிய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்த பேராசிரியர் சத்தியநாராயணா கும்மடி, "குறைந்த செலவில் லிக்னோசெல்லுலோசிக் (lignocellulosic) கழிவுகளை முன்பதப்படுத்துதல் ஏதுமின்றி பிரிக்கும்திறன் கொண்ட உயிரியை நாங்கள் தனிமைப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நொதிகளின் உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்சிதை மாற்றங்களுக்காக மேற்கொள்ளப்படும் உயிரிச் செயலாக்கத்திற்கான செலவு குறையும்" என்றார்.

தற்போதுள்ள தொழில்நுட்பத்துடன் இந்த ஆராய்ச்சியை ஒப்பிட்டுப் பேசிய பேராசிரியர் சத்தியநாராயணா என். கும்மடி, "சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் முன்பதப்படுத்துதல், நொதிகளை நீராற்பகுத்தல் (enzyme hydrolysis), நுண்ணுயிரி நொதித்தல் (microbial fermentation) ஆகியவற்றை ஒரே சமயத்தில் மேற்கொள்ளுதல் என்பது உயிரியல் மாற்றத்தில் மிகச் சவாலான அம்சமாகும். இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பல நொதிகளை உருவாக்கும் ஒற்றை நுண்ணுயிரியை தனிமைப்படுத்துவதில் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், கரும்பாலைக் கழிவுகளில் இருந்து புதிய திரிபு ஒன்றைத் தனிமைப்படுத்துவதில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்

ஆராய்ச்சியின் தனித்துவ அம்சங்கள் வருமாறு:

  • புதுமையான ஒற்றை நுண்ணுயிரியைப் பயன்படுத்தி வெவ்வேறு வேளாண் கசடுகளை சர்க்கரையாக்குதல் மற்றும் நொதித்தல் ஆகியவற்றை செய்ய முடியும் என இந்த ஆய்வு நிரூபித்தது
  • புதுப்பிக்கத்தக்க உயிரி எரிபொருளை உருவாக்கும் வகையில் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அணுகுமுறையை மேற்கொள்வதால் இந்த ஆராய்ச்சி தனித்துவமிக்கது

Ø எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு சாத்தியமான பலன்களை அளிக்கும் வகையில் உயிர்ம அடிப்படையிலான உயிரி சுத்திகரிப்பு என்ற கொள்கைப்படி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மிகப் பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 100 முதல் 150 டன் எடைகொண்ட உயிரி உற்பத்தி செய்யப்படுகிறது. வேளாண் கழிவுகளைப் பயன்படுத்தி தொழில்துறை நொதிகள் மற்றும் இரண்டாம் தலைமுறை எரிபொருளான எத்தனால் ஆகியவற்றைத் தயாரிப்பதில் அண்மைக்காலமாக உலகளவில் அதிக ஆர்வம் காணப்படுகிறது.

மூன்று முக்கிய வேளாண் கழிவுகள்:

Ø கோதுமைத் தவிடு

Ø ஜவ்வரிசிக் கழிவு

Ø அரிசித் தவிடு

குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய இந்தக் கழிவுகள் தொழில்துறை நொதிகளை உருவாக்கும் வகையில் அதிக ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், இந்தக் கழிவுகளில் உள்ள சிக்கலான அமைப்புமுறை நொதிகளை நீர்த்துப் போகச் செய்யும் பணியை கடினமாக்குகிறது. இதற்கான பதப்படுத்தும் நடைமுறைகளும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாகும்.

இதனால்தான், கரும்புக் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாசிலஸ் எஸ்பி பிஎம்06 (Bacillus sp PM06) பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்தொழில்துறை நொதிகள் மற்றும் வேளாண் கழிவுகளில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த பாக்டீரியா உதவிகரமாக இருந்தது. கோதுமைத் தவிடு அதிகளவு பயன்தரக் கூடியதாகவும், அதற்கு அடுத்த நிலையில் ஜவ்வரிசிக் கழிவு, அரிசித் தவிடு ஆகியவை இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், இந்த செயலாக்க முறை சிக்கனமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் அமைந்துள்ளது.

###


(Release ID: 1839068) Visitor Counter : 287


Read this release in: English