சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மூன்று சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி-53 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Posted On: 30 JUN 2022 8:06PM by PIB Chennai

மூன்று சிங்கப்பூர் செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி-53- இஸ்ரோ வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியது. பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் மூலம் இந்த செயற்கைக் கோள்கள் இன்று மாலை மணி 6.02-க்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டன.

     ஒரே வாரத்தில் இஸ்ரோ 2-வது முறையாக வெற்றிகரமாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதுஏற்கனவே ஜூன் 23 அன்று ஜிசாட்-24 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி செலுத்துவாகனம் மூலம் விண்ணில் செலுத்தியது.

     365 கிலோகிராம் எடையுள்ள டிஎஸ்-இஓ செயற்கைக்கோளும், 155 கிலோகிராம் எடையுள்ள நியூசார் செயற்கைக்கோளும் சிங்கப்பூருக்காக கொரியா குடியரசால் உருவாக்கப்பட்டவை. 2.8 கிலோகிராம் எடையுள்ள ஸ்கூப் (SCOOB)-1 என்ற 3-வது செயற்கைக்கோள் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது.

     சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டபின், செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் திரு எஸ் சோமநாத், இந்த செயற்கைக்கோள்கள் அவற்றுக்கான உரிய பாதையில் செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். 10 டிகிரி சாய்வுடன் 570 கிலோமீட்டர் சுற்றுவட்டப்பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இந்த வெற்றிக்காக நியூ ஸ்பேஸ் இந்தியா (NSIL) நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் திரு சோமநாத் வாழ்த்து தெரிவித்தார்.

     இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானது என்று இயக்க இயக்குனர் திரு எஸ் ஆர் பிஜூ தெரிவித்தார்

                              *****



(Release ID: 1838330) Visitor Counter : 164


Read this release in: English