சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்
Posted On:
29 JUN 2022 12:24PM by PIB Chennai
தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்களே,
வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன் அவர்களே,
வேலூர் சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் வி.ஐ.டி துணைத்தலைவர் திரு. ஜி.வி.செல்வம் அவர்களே,
வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் திரு.சங்கர் விஸ்வநாதன், டாக்டர் சேகர் விஸ்வநாதன் அவர்களே,
சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் சர்வதேச பள்ளியை திறந்துவைப்பதற்காக வந்திருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பறந்துவிரிந்த மற்றும் அமைதியான இந்த வளாகத்தை காணும்போது, பயில்வதற்கு உகந்த இடமாக தெரிகிறது, வி.ஐ.டி குழும கல்வி நிறுவனங்களின் கல்வி பயணத்தில் இதுபோன்ற முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதற்காக இந்த நிர்வாகத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரம் கோவில்கள் அல்லது அன்ன சத்திரங்களை கட்டுவதைவிட ஒரு குழந்தைக்கு கல்வியறிவு புகட்டுவது மிகச்சிறந்தது என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தனியார் துறையில் உயர்கல்வியை வலுப்படுத்த வி.ஐ.டி குழுமம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கல்வி நிறுவனம் அவர்களது மகுடத்தில் மற்றுமொரு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.
சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,
அறிவாற்றலின் பொக்கிஷமாகத் திகழும் இந்தியா, பண்டை காலத்திலிருந்தே கல்வியிலும் சிறப்புற்று விளங்குவதை நீங்கள் அறிவீர்கள். குருகுல முறையில், கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு, ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்குத் தேவையான அறிவாற்றல் மற்றும் திறன்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தியது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், தக்ச ஷீலா, புஷ்ப கிரி மற்றும் நாலந்தா போன்ற உலகத்தரம் வாய்ந்த சர்வதேச கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்தியா, ஒரு காலத்தில் விஸ்வகுருவாக கருதப்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த மையங்களில் பல்வேறு பாடங்களை பயின்றனர். பண்டைக் காலத்திலிருந்தே அறிவியல், கணிதம், தத்துவம், மருத்துவம், வானவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியா உலகிற்கு அளப்பரிய பங்காற்றியுள்ளது.
சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,
மாணவர்களிடையே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தலைசிறந்து விளங்குவதற்கான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். தொழில்நுட்பம் சார்ந்த வேகமாக மாறிவரும் உலகில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அந்த வகையில், மாணவர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சிறந்தத் திறனை பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும். மாணவர்கள் விரைவாக சிந்தித்து, சொந்தக் காலில் நிற்பதோடு, 21-ம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, புதுமைகளை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
எதிர்காலத்திற்கு ஏற்ற மற்றும் புரிந்து படிப்பதற்கான கல்வித் திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம். பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டமல்லாதவற்றை செயற்கையாக தரம் பிரிக்கும் நடைமுறையை கைவிட்டு, கல்வியில் பன்னோக்கு கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.
பண்டைக்கால குருகுல முறையில், ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களோடு இருந்ததுடன், அவர்களது நடத்தைகளை ஒழுங்குப்படுத்த அனுமதித்து, மாணவர்களை சரியாக மதிப்பிட முடிந்தது. வேலூர் சர்வதேச பள்ளியில், குரு சிஷ்யா பரம்பரையின் ஆக்கப்பூர்வ அம்சங்களை தற்கால கற்பித்தல் முறையோடு ஒருங்கிணைக்க, ‘வீட்டு பெற்றோர்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,
பள்ளிக் கல்வியில் தாய்மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும்.
மாணவர்கள் அவர்களது சமூக சூழல் – பள்ளி வளாகம், அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வீடுகளில் தாய்மொழியிலேயே சுதந்திரமாகப் பேசுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியில் சுதந்திரமாக பேசுவதோடு, அதனைப் பெருமையாகக் கருதினால் மட்டுமே, நமது கலாச்சார பாரம்பரியத்தை உண்மையிலேயே பாராட்ட முடியும்.
நமது தாய்மொழி மீது கவனம் செலுத்துவது என்பது, ஒருவர் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்காக அல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம் என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்துகொள்ளவும் உதவும்.
சகோதரிகள் மற்றும் சகோதரர்களே,
மாணவர்களின் கல்வி மற்றும் பிற்காலத்தில் தொழில்சார்ந்த அறிவாற்றலை பெறுவதற்கு பள்ளிக் கல்வி மிகச்சிறந்த அடித்தளமிடும் என்பது முற்றிலும் சரியானதாகும். அதைவிட முக்கியமானது, ஒரு குழந்தை தனது வளரும் பருவத்தில் பள்ளியில் செலவிடுவது அவர்களது ஆளுமையை வடிவமைப்பதுடன், அவர்களது நடத்தையையும் ஒழுங்குப்படுத்துகிறது. இது தனிப்படை அளவில் தனிநபரின் வெற்றியை தீர்மானிப்பதாக மட்டுமின்றி, முன்மாதிரி குடிமகனாக உருவாக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும்.
பள்ளிகள் நற்பண்பு சார்ந்த, ஒவ்வொரு மாணவனின் தலைசிறந்த திறமை மற்றும் பண்புகளை வெளிக்கொணரக் கூடிய முழுமையான கல்வி முறையில் கவனம் செலுத்த வேண்டும். நற்பண்புகள் இல்லாத கல்வி, எந்தக் காலத்திலும் கல்வியாக கருதப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்த முயற்சிப்பதில், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கல்வி நிறுவனங்கள் பாடுபடுவதோடு, மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்கள் உற்சாகத்துடன் விளையாட்டு அல்லது உடற்பயிற்சியை மேற்கொண்டால், அவர்களது வாழ்க்கை முறை ஆரோக்கியமானதாக இருக்கும்.
படிப்பு என்ற பெயரில் மாணவர்களை நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைக்கும் நவீன போட்டிக் கல்வி ஒரு நஞ்சு போன்றதாகும். அவர்கள் வெளி உலகை அனுபவிப்பதோடு – இயற்கையுடன் நேரத்தை செலவிடுவதுடன், சமுதாயத்தின் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பல்வேறு கலை மற்றும் வர்த்தக நுட்பங்களை அறிந்துகொள்ள வேண்டும். வகுப்பறை பாடங்களுடன், களப்பயிற்சி, சமூக விழிப்புணர்வு மற்றும் சமுதாய சேவையாற்றுவதும் அவசியம். இளமைப் பருவத்திலிருந்தே மாணவர்களிடம் சேவை மனப்பான்மையை உருவாக்குவதும் மிகுந்த அவசியம்.
இன்று இந்தப் பள்ளிக்கூடத்தை திறந்துவைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தைகளை வளர்த்தெடுத்து பக்குவப்படுத்தும் இந்த முக்கிய பணியை மேற்கொள்வதற்காக, டாக்டர் விஸ்வநாதன், திரு.செல்வம் மற்றும் வி.ஐ.டி. குழும நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.
“அறிவாற்றலே ஒருவருக்கு அழியா சொத்து” என்ற பொருள்படும்
“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி வணக்கம்,
ஜெய்ஹிந்த்.
*************
(Release ID: 1837838)
Visitor Counter : 130