மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்தன்று 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய உள்ளனர்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

Posted On: 18 JUN 2022 9:30AM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கவுண்டவுன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா மைதானத்தில் நடைபெற் யோகா கவுண்டவுன் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கடந்த 2014 டிசம்பர் 21 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது, அன்று முதல் 8 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம் என்றார். சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், 75 நாட்களாக பல்வேறு துறைகளில் யோகா தின கவுண்டவுன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாகவும், அதேபோல் இன்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தார்.

நமது நாட்டில் தோன்றிய, எளிமையான கலையான யோகா உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது, என்றார். மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை யோகாவானது கட்டுப்படுத்துவதோடு ஆரோக்கிய தேகத்தை பராமரிப்பதாக தெரிவித்தார். இதேபோல இன்று சோம்நாத்தில் நடக்கும் இந்த நிகழ்வில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்சோத்தம் ரூபாலா, இத்துறையின் இணையமைச்சர் திரு. சஞ்சீவ்குமார் பல்யாண் உத்தரகாண்டில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் அனைவரும் தினமும் யோகாவை செய்வதால் ஆரோக்கியமான உடலை பெற முடியும் என தெரிவித்த அவர், சர்வதேச யோகா தினத்தன்று நாடு முழுவதும் 75 ஆயிரம் இளைஞர்கள் யோகா பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் – மீனவர் நலத்துறை செயலர் திரு. ஜவகர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. அரவிந்த், நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*************** 

 


(Release ID: 1834986) Visitor Counter : 136