சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியா-இஸ்ரேல் சிறப்புமிக்க கிராமங்களுக்கு 150 கிராமங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தெரிவித்துள்ளார்
சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் பயனடைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பரவலாக கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி கூறியுள்ளார்
Posted On:
02 JUN 2022 1:41PM by PIB Chennai
சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் பயடைவதற்கான 29 சிறப்புக்குரிய மையங்களை சுற்றியிருக்கும் கிராமங்களில் காய்கறிகள் தொடர்பான தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் பரவலாக கொண்டு செல்லப்படுவதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் கிராமத்தில் உள்ள காய்கறிகளுக்கான இந்தியா- இஸ்ரேல் சிறப்பு மையத்தை பார்வையிட்ட போது, அவர் இவ்வாறு கூறினார்.
விவசாயிகளுடன் கலந்துரையாடிய டாக்டர் லிக்கி, இஸ்ரேல் தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் இந்த சிறப்பு மையங்களில் இருந்து பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த மையங்கள் செயல்படும் இடங்களை சுற்றியுள்ள 150 கிராமங்கள், இந்தியா- இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள் திட்டத்தின் கீழ் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டினையொட்டி முதல் ஆண்டில் 75 கிராமங்களுடன் இது தொடங்கப்படும் என்றார். இந்தியா- இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள் திட்டத்தின் கீழ் 75 கிராமங்களை தத்தெடுத்துகொள்ள 13 சிறப்பு மையங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியா- இஸ்ரேல் சிறப்பு கிராமங்கள் திட்டம் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தும்: 1) நவீன வேளாண் கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பங்கள், 2) திறன் கட்டமைப்பு, 3) சந்தை இணைப்பு.
இந்தியா- இஸ்ரேல் வேளாண் பணித்திட்டத்தின் கீழ் இரு நாடுகளும் பரஸ்பரம் அமலாக்கத்திற்கு ஒப்புகொண்ட செயல்பாடுகள் அடிப்படையில் அவ்வப்போது செயல்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் டாக்டர் லிக்கி கூறினார். தொழில்நுட்பங்கள் இஸ்ரேலின் நிபுணர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பங்களின் செயல் விளக்கத்திற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தோட்டக்கலை வளர்ச்சிக்கான இயக்கம் நிதியுதவி அளிக்கும். இஸ்ரேல் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் சிறப்பு மையங்கள் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படவுள்ளன. தோட்டக்கலை துறையில் நவீன தொழில்நுட்பங்களின் செயல்விளக்கம் மற்றும் பயிற்சி மையங்களாக இவைசெயல்படும். பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்கு பழங்கள் மற்றும் காய்கறி நாற்றுக்களை நடுவதற்கான பொருட்களை இந்த மையம் வழங்கும்.
பாதுகாக்கப்பட்ட சாகுபடி மற்றும் திறந்தவெளியில் காய்கறி உற்பத்திக்கு நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது குறித்து துறைசார் அலுவலர்கள், விவசாயிகள், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். சுயவேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை பற்றி மக்களை ஊக்குவிப்பதற்கான திறன்மேம்பாட்டு பயிற்சிகளையும் இந்த மையம் வழங்குகிறது. இது ஏராளமான இளைஞர்களை விவசாயத்தை நோக்கி ஈர்த்துள்ளது.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான சொட்டுநீர் பாசனமுறை, காய்கறிகளுக்கு பாதுகாக்கப்பட்ட சாகுபடி, காய்கறிகளுக்கு திறந்தவெளி சாகுபடி, மண் அரிப்பை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்பம், மண் வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட இஸ்ரேல் தொழில்நுட்பங்களை திண்டுக்கல் சிறப்பு மையம் பயன்படுத்துகிறது. விவசாயிகள் தரமான காய்கறி செடிகளுக்கான நாற்றுகளை இங்கு பார்வையிடலாம்.

****
(Release ID: 1830412)