சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி சென்னை உருவாக்கிய திடக்கழிவு எரிப்பான் தமிழ்நாட்டில் உள்ள பெல் தொழிற்சாலையில் இயங்கத் தொடங்கியுள்ளது
Posted On:
27 MAY 2022 3:58PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) உருவாக்கி உள்ள உள்நாட்டுத் தயாரிப்பான 'நகராண்மை திடக்கழிவு எரிப்பான் சோதனை ஆலை', தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரத மிகுமின் நிறுவனத் (BHEL) தொழிற்சாலையில் இயங்க உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பிரிக்கப்படாத நகராண்மை திடக்கழிவுகளை திறம்பட பதப்படுத்துவதற்காக முதன்முறையாக 'சுழல் உலை தொழில்நுட்ப'த்தில் (Rotary Furnace Technology) இந்த எரிப்பான் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு ஒரு டன் வரை பிரிக்கப்படாத நகராண்மைக் கழிவுகளைப் (MSW) பதப்படுத்த முடியும். நீராவியை உற்பத்தி செய்வது இதன் முதல் பணியாக இருந்தாலும், சுத்தமான வாயு உமிழ்வு, சாம்பல் ஆகியவை துணைத் தயாரிப்புகளாக வெளியேறும். இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தால் பெல் நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் 'உச்சத்தர் அவிஷ்கார் யோஜனா' (UAY) திட்டத்தில் இது ஒரு பகுதியாகும். சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்களால் எரித்தல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான தேசிய மையத்தில் (National Centre for Combustion Research and Development (NCCRD) இது உருவாக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தில் இந்த ஆலை முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
திருச்சி பெல் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அவர்கள் இந்த ஆலையை இன்று (27 மே 2022) தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு தலைமை வகித்த சென்னை ஐஐடி கெமிக்கல் என்ஜினியரிங் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ஆர்.வினு, பெல் அதிகாரிகள், சென்னை ஐஐடி ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தப் பணிகளும் தொடங்கிய ஆறே மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளன. திருச்சி பெல் நிறுவனத்தின் Combined Cycle Demonstration Plant வளாகத்தில் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது.
ஆலையைத் தொடங்கி வைத்துப் பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், "கழிவு மேலாண்மை என்பது முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. விரைவாகவும், பாதுகாப்பாகவும் அகற்ற உதவும் வகையில் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது. சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன திடக்கழிவு எரிப்பு சாதனம், அளவிடுதல் மற்றும் பாதுகாப்பான அகற்றல் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, கழிவையும் செல்வமாக மாற்றித்தரும் வகையில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது" என்றார்
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 133 மில்லியன் டன் அளவுக்கு நகராண்மை திடக்கழிவு உற்பத்தியாகிறது. இதில் 85 விழுக்காடுக்கும் மேலாக குப்பைக் கிடங்குகளில்தான் குவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 14,600 டன்களும், சென்னையில் நாள் ஒன்றுக்கு 5,400 டன்களும் திடக்கழிவு உற்பத்தியாகிறது (TNPCB, 2021). ஒவ்வொரு ஆண்டும் நகராண்மை திடக்கழிவு உற்பத்தி 1.3 விழுக்காடு அதிகரிப்பதுடன், தனிநபர் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 0.5-1 கிலோ என்ற அளவில் இருந்து வருகிறது.
உரமாக்குதல், மண்புழு உரம் தயாரித்தல், உயிரிவாயு (biogas) உருவாக்கம் ஆகியவற்றுக்காக உயிரி-கரிமக் கழிவுகளைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்திய பின்னர், பிளாஸ்டிக், அதிக கலோரி கொண்ட பொருட்கள் என நாள் ஒன்றுக்கு 2,500 டன் உயிரி-கனிமக் கழிவுகள் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மைத் தொழிலின் மதிப்பு 2025ம் ஆண்டுவாக்கில் 13.62 பில்லியன் டாலர்களாக இருக்கும்.
மேற்கத்திய நாடுகளைப் போலன்றி இந்தியாவில் நகராண்மை திடக் கழிவு பல்வேறு சேர்மங்களைக் கொண்டதாகவும், அதிக ஈரப்பதம் (40-50%), குறைந்த கலோரி மதிப்பு (≤ 2 kcal/g), செயலற்றதன்மை உடையதாகவும் இருப்பதாக இத்திட்டத்தில் பங்குதாரராக இருந்த பெல் நிர்வாகிகள் கூறுகின்றனர். தற்போதுள்ள எரியூட்டும் அமைப்புகளில் ஆற்றல் மீட்போ, நச்சு உமிழ்வுகளோ ஏற்படுவதில்லை. சென்னை ஐஐடி-யால் வடிவமைக்கப்பட்ட நகராண்மை திடக்கழிவு எரியூட்டு அமைப்பு இவற்றில் பெரும்பாலான சவால்களை நிவர்த்தி செய்கிறது. அத்துடன் பயனர்கள் விரும்பும் பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. கழிவுகளின் அளவைக் குறைப்பதும், திடக்கழிவு சேர்மங்களில் இருந்து ஆற்றல் மீட்பும்தான் தற்போதைய தேவையாக உள்ளது.
திடக்கழிவு எரிப்பான் செயல்படும் விதம் குறித்து விரிவாக எடுத்துரைத்த, சென்னை ஐஐடி-யின் ரசாயனப் பொறியியல் பிரிவு இணைப் பேராசிரியரும், இத்திட்டத்தை தலைமையேற்று உருவாக்கியவருமான டாக்டர் ஆர்.வினு கூறுகையில், "சென்னை ஐஐடி-யில் உள்ள எரித்தல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுக்கான தேசிய மையத்தில் (NCCRD) ஆரம்பக் கட்ட பரிசோதனைக்காக சிறிய அளவிலான சுழல்உலை எரிப்பானைப் பயன்படுத்தினோம். வெவ்வேறு அளவுகளில் கழிவுகளை ஆய்வு செய்தபோது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அதன் மேம்பட்ட, உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முழு அளவிலான இயந்திரம்தான் திருச்சி பெல் நிறுவனத்தில் இயங்கி வருவதாகும். பெல் நிறுவனத்தில் உள்ள இந்த இயந்திரத்தில் பெறப்படும் தரவுகள், இதற்கான செயல்பாட்டை முறையாக அளவிட ஏதுவாக இருக்கும்" என்றார்.
பெல் நிறுவனம் மேலும் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு, எதிர்காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதுடன், நம்பகமானதாகவும், பயனர்களுக்கு ஏற்பவும் தரம் உயர்த்தி இதனை சந்தைப்படுத்தும்.
பல்வேறு சேர்மங்களைக் கொண்ட கழிவுகளை எரிக்கும்போது, பறக்கும் தன்மை கொண்ட துகள்களைப் பிரிக்க, இந்த எரிப்பானில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது. இந்த சல்லடை அமைப்பு, சென்னை ஐஐடி-யில் 40 விழுக்காடு ஈரப்பதம் உள்ள பொருட்கள் வரையிலான பல்வேறு கலப்புக் கழிவுகளால் சோதனை செய்யப்பட்டது. சோதனை ஆலையில் வலுவான உமிழ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஃபில்டர், வெட் ஸ்க்ரப்பர், ட்ரை ஸ்க்ரப்பர் போன்ற வடிப்பான்கள் போன்றவை மாசுக்களைக் கட்டுப்படுத்தி, உமிழ்வை குறிப்பிட்ட வரைமுறைக்குள் இருப்பதை உறுதி செய்கின்றன.
### 
(Release ID: 1828743)
Visitor Counter : 141