சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி, அதன் கம்ப்யூட்டர் சயின்ஸ் (கணினி அறிவியல்) பாடப்பிரிவுகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்துள்ளது


இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை கட்டணமின்றி கிடைக்கச் செய்யும் வகையில், பாடப்பிரிவுகளை வழங்கும் முன்முயற்சியை ஆசிரிய உறுப்பினர்கள் எடுத்துள்ளனர்

Posted On: 04 MAY 2022 3:43PM by PIB Chennai

அனைவருக்கும் உயர் தரத்துடன் கூடிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் கிடைக்கச் செய்யும் விதமாக பிரத்யேகமான முன்முயற்சியை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) மேற்கொண்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வமுடைய எவரும் அணுகும் வகையில் முக்கிய படிப்புகளைக் கொண்ட வலைவாசல் (Portal) ஒன்றை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

'இந்தியாவின் கிராமப் பகுதிகளுக்கும் உயர்தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்' என்ற சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்த முன்முயற்சி ஒரு முக்கிய படியாகும்.

புரோகிராமிங் (Programming), டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), கம்ப்யூட்டர் ஆர்கனைசேஷன் (Computer Organisation), அல்காரிதம் (Algorithms) ஆகிய முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் http://nsm.iitm.ac.in/cse/ என்ற வலைவாசலில் (portal) காணமுடியும். தொற்றுநோய் காலத்தில் சென்னை ஐஐடி மாணவர்களுக்காக ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் நடத்தப்பட்ட நேரடி விரிவுரைகளை யூடியூப்-பில் காண முடியும்.

இந்த முன்முயற்சி குறித்து பேராசிரியர் சி.சந்திரசேகர், தலைவர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை (CSE), சென்னை ஐஐடி கூறியதாவது: "இளங்கலை மற்றும் பட்டதாரி நிலைகளில் உள்ள மாணவர்களுக்காக  இத்துறையின் ஆசிரியர்கள் நடத்திய சிஎஸ்இ முக்கிய பாடப்பிரிவுகளின் நேரடி விரிவுரைகளின் பதிவுகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த பாடத் திட்டங்களைப் பற்றிய அடிப்படைக் கருத்துகள் மற்றும் கொள்கைகளை சரியான முறையில் கற்றுணர முடியும். கணினி அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் முக்கியமாகவும், அடிப்படையாகவும் விளங்கும் பாடங்களை எவ்வாறு திறம்பட கற்பிப்பது, சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்களிடையே எவ்வாறு மேம்படுத்துவது போன்றவை பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் CSE முக்கிய பாடங்களைக் கற்பித்தல் மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த இந்த போர்ட்டல் பயன்படும் என நம்புகிறோம்."

இந்தியாவில், குறிப்பாக ..டி.க்களில் மிகவும் விரும்பப்படும் பொறியியல் துறைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முக்கியமான ஒன்றாகும். மாணவர்களும் அதிகளவில் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ..டி.யில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சேர எண்ணற்ற மாணவர்கள் விண்ணப்பித்தாலும், இத்துறையில் குறைந்த அளவிலேயே மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது.

இந்த முன்முயற்சியின் பிரத்யேக அம்சங்களை விளக்கிய, சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் ரூபேஷ் நஸ்ரே தெரிவித்ததாவது: "சென்னை ஐஐடி-யில் படிக்க முடியாத மாணவர்கள்- குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் அதே பாடத் தொகுதிகள் அவர்களுக்கும் கிடைக்கும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான பாடத் தொகுப்புகள் கிடைக்கும் என்பதை இந்த முன்முயற்சி உறுதிசெய்யும்."

ரூபேஷ் நஸ்ரே மேலும் கூறுகையில், "மாணவர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, சென்னை ஐஐடி-யில் கற்பிக்கப்படும் விரிவுரைகளை கிடைக்கச் செய்வதன் மூலம் இதர கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் பயனடைவார்கள்" என்றார்.

மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த ஏதுவாக, நேரடி பயிற்சி அமர்வுகளை நடத்த மூத்த மாணவர்களை ஈடுபடுத்தவும் இத்துறை திட்டமிட்டுள்ளது.

போர்ட்டல் மூலம் பயனடைந்த மாணவரான திரு. அபிஷேக் திமான், இந்த முன்முயற்சியை மேற்கொண்ட ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். "சென்னை ஐஐடி-யின் மாணவராக இல்லாத போதும், இந்த அற்புதமான முயற்சியின் காரணமாக இக்கல்வி நிறுவனத்தின் விரிவுரைகளைக் கேட்டு கற்றுக்கொள்ள முடிகிறது." என்றார் அவர்.

போர்ட்டல் மூலம் பயன்பெற்ற மற்றொருவரான திரு.ராஜேஷ் சந்திரா தெரிவித்ததாவது. "கணினி அறிவியல் பாடத்தில் நிபுணத்துவத்தை மேம்படுத்த விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளதால், இது உண்மையிலேயே சென்னை ஐஐடி-யின் பயனுள்ள முயற்சியாகும்."

மாணவர்கள் தங்கள் சுயமதிப்பீட்டிற்காக, போர்ட்டலில் உள்ள கேள்வி-பதில் பகுதியில் பங்கேற்கவும் முடியும். பாடங்களைப் பற்றிய தங்கள் புரிதலை இதன்மூலம் கண்டறிய முடியும்.

சென்னை ஐஐடி-யின் 3-ஆம் ஆண்டு பி.டெக். மாணவரான கொவ்வுரி ஸ்ரவண்குமார் ரெட்டி, இத்திட்டத்தில் பணியாற்றிய தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "இளங்கலை மாணவர்களுக்கு இக்கல்வி நிறுவனம் நடத்தும் தேர்வுகளுக்கு இணையாக, போர்ட்டலில் உள்ள கேள்வி-பதில்கள் கடினமாக இருக்கின்றன." என்றார்.

வரும்காலத்தில் சிறந்த மதிப்பீட்டிற்காக வெவ்வேறு விதமான கேள்வி-பதில்களை உருவாக்க கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை திட்டமிட்டுள்ளது. அனைத்துக் கூறுகளும் இணைந்து மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டத்தை கற்க ஏதுவாக விரிவானதொரு தொகுப்பை வழங்கும்.

****


(Release ID: 1822613) Visitor Counter : 393


Read this release in: English