சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்டோமெதசின் (Indomethacin) மருந்துக்கு செயல்திறன் இருப்பதை சென்னை ஐஐடி வடிவமைத்த சோதனை வெளிப்படுத்துகிறது

இன்டோமெதசின் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மருந்து என்பதால், லேசான கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு புதிய சிகிச்சை முறையை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சிப் பணி அமைந்துள்ளது. நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Nature Scientific Reports) இதழில் இதன் ஆராய்ச்சி முடிவுகள் குறித்த மதிப்பாய்வு வெளியிடப்பட்டு உள்ளது

प्रविष्टि तिथि: 22 APR 2022 4:51PM by PIB Chennai

லேசான மற்றும் மிதமான கோவிட்-19 நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிசிச்சையில், ஸ்டெராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்தான இன்டோமெதசின் (Indomethacin)  மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது என, அண்மையில் வெளியான நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில்  (https://www.nature.com/articles/s41598-022-10370-1) என்ற தலைப்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சென்னை ஐஐடி-யின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. சென்னை ஐஐடி-யின் நிறுவன பேராசிரியரான பேரா. ஆர்.கிருஷ்ணகுமார் அவர்களால் இந்த ஆய்வு கருத்துரு ஆக்கம் செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இன்டோமெதசின், 1960-களில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடர்பான சிகிச்சைக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

இத்தாலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளால் அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்ட போதிலும், இந்திய ஆராய்ச்சியாளர்கள்தான் இன்டோமெதசினின் செயல்திறனை மருத்துவ பரிசோதனை மூலம் முதன்முறையாக வெளிக்காட்டி உள்ளனர்.

சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும், ஆக்சிலர் வென்சர்ஸ் (Axilor Ventures) தலைவருமான திரு.கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள்தான் இந்த ஒட்டுமொத்த ஆய்வுக்கான நிதியையும் அளித்து உள்ளார்.

சென்னை ஐஐடி-யின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறுகிறார்: "வீக்கம் மற்றும் சைட்டோகைன் ஸ்டார்ம் (Cytokine storm) ஆகியவை கோவிட் நோய்த்தொற்றின் கொடிய விளைவுகள் என்பதை அறிந்து, ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்தான இன்டோமெதசின் தொடர்பான ஆய்வை மேற்கொள்வது என முடிவு செய்தோம். கொரோனா வைரசுக்கு எதிராக வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கை இருப்பதை அறிவியல்பூர்வமான சான்றுகள் வலுவாக எடுத்துரைக்கின்றன. இன்டோமெதசின் பாதுகாப்பான, நன்கு புரிந்துகொள்ளப்பட்ட மருந்தாகும். கடந்த 30 ஆண்டுகளாக இந்த மருந்தை எனது துறையில் பயன்படுத்தி வருகிறேன்."

ஆய்வுக் கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்த பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார், நிறுவன பேராசிரியர், சென்னை ஐஐடி தெரிவித்ததாவது: "அனுமதிக்கப்பட்ட 210 மொத்த நோயாளிகளில் 107 பேர் பாராசிட்டமால் மற்றும் நிலையான சிகிச்சை முறையுடன் கூடிய கட்டுப்பாட்டுக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டனர். மீதமுள்ள 103 நோயாளிகளுக்கு நிலையான சிகிச்சையுடன் இன்டோமெதசின் செலுத்தப்பட்டது. இருமல், சளி, காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டல் போன்ற அறிகுறிகளுக்காக நோயாளிகள் தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இன்டோமெதசின் செலுத்தப்பட்ட 103 நோயாளிகளில் எவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை. அதே நேரத்தில், கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த 109 பேரில் 20 பேருக்கு 93 விழுக்காடுக்கும் குறைவான ஆக்சிஜன் செறிவூட்டல் நிலை ஏற்பட்டது. இன்டோமெதசின் குழுவில் இருந்த நோயாளிகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்தும் மீண்டு விட்டனர். கட்டுப்பாட்டுக் குழுவிற்கோ இருமடங்கு நேரம் பிடித்தது. கல்லீரல், சிறுநீரக செயல்பாடு சோதனைகளின் போது எந்த எதிர்மறையான எதிர்வினையையும் காட்டவில்லை.

பதினான்காம் நாள் தொடர் கவனிப்பின்போது, கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த நோயாளிகளில் பாதிப் பேருக்கு பல்வேறு அசௌகரியங்கள் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் இன்டோமெதசின் நோயாளிகளைப் பொருத்தவரை சோர்வாக இருப்பதாக மட்டுமே தெரிவித்தனர்.

இந்த ஆய்வுப் பணி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “இன்டோமெதசின் பரிசோதனை குறித்த முடிவுகளை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன், பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் அவர்களின் குழுவினரைப் பாராட்டுகிறேன். இனி எப்போதாவது கோவிட்-19 அலை ஏற்படும் பட்சத்தில் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள முடிவுகள்  பயனுள்ளதாக இருக்கும்என்று குறிப்பிட்டார்.

பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலை, எம்..டி. பிரஸ் ஆகியோரைக் கொண்ட குழுவால் நடத்தப்படும் "ரேபிட் ரிவ்யூஸ் கோவிட்-19" மதிப்பாய்வுக்காக இந்த ஆய்வுப்பணி தேர்வு செய்யப்பட்டது. இதன் மதிப்பாய்வில் கூறப்பட்டதாவது, "முடிவுகள் கட்டாயமானது, நம்பகமானது என மதிப்பாய்வு செய்தவர்கள் கருதினார்கள்."

எமரி பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணரான பேராசிரியர் விகாஸ் சுகத்தமே, பிரிட்டனைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் டாக்டர் காலின் பிரவுன் ஆகிய இரு விமர்சகர்களும் இந்த கட்டுரைக்கு 5க்கு 4 என மதிப்பீடு அளித்துள்ளனர்.

குறிப்பு: https://rapidreviewscovid19.mitpress.mit.edu/pub/7cf47wou/release/1

இந்த ஆய்வுப் பணியின் முடிவுகளுக்கு தனது ஆதரவை நல்கியுள்ள இந்திய மருத்துவ சங்கம், குழுவினரின் முந்தைய ஆய்வையும் அதன் இதழில் பிரசுரித்தது. முந்தைய ஆய்வில் 72 நோயாளிகளுக்கு இன்டோமெதசினும், மற்றொரு 72 நோயாளிகளுக்கு பாராசிட்டமாலும் செலுத்தப்பட்டது. இன்டோமெதசின் முறையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒரே ஒரு நோயாளிக்கு மட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் பாராசிட்டமால் குழுவில் 28 பேருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. கடுமையான கோவிட் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் கூட ஆக்சிஜன் தேவைப்படாமல் இன்டோமெதசின் பாதுகாப்பை வழங்கியது.

டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் மேலும் கூறுகிறார்: "இன்டோமெதசின் அனைத்து விதமான உருமாறிய நோய்த்தொற்றுகளிலும் செயல்படுகிறது. முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் தலா ஒரு சோதனை முயற்சியை நாங்கள் மேற்கொண்டோம். இரண்டிலுமே முடிவுகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. இந்த ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) கவனித்து, கோவிட் சிகிச்சை முறையில் இன்டோமெதசினை பயன்படுத்திக் கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன்”.

****


(रिलीज़ आईडी: 1819027) आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English