நித்தி ஆயோக்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊக்கம் மிக்க 3 பெண்கள் நித்தி ஆயோக்-இன் ‘இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள்’ விருதுகளைப் பெற்றுள்ளனர்
Posted On:
23 MAR 2022 5:17PM by PIB Chennai
‘வலிமையும், திறமையும் மிக்க இந்தியா’ என மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் தொடர்ந்து முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றனர். பல்வேறு துறைகளில் இத்தகைய பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நித்தி ஆயோக் இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள் விருதுகளை நிறுவியுள்ளது.
இந்த ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக 75 பெண் சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 3 தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
- வித்யா சுப்பிரமணியன், சென்னை, வித்யா சுப்பிரமணியன் கல்வி நிறுவனம்
கர்நாடக இசை மற்றும் இதர பாரம்பரிய இந்திய கலைகளை இணையம் வழியாக கற்பிக்கும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள வித்யா சுப்பிரமணியன், வீட்டிலிருந்து பணி செய்யும் வாய்ப்புகள் மூலம் சுமார் 100 பெண் கலைஞர்கள் மற்றும் ஆசிரியைகள் திறன் பெற உதவி செய்துள்ளார். வித்யா சுப்பிரமணியன் கல்வி நிறுவனம் இணையவழி கற்பிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது 1500-க்கும் அதிகமான இளம் மாணவர்களைக் கொண்டுள்ளது. இது நீடிக்கவல்ல, சமூக தொழில் நிறுவன மாதிரியில் நடத்தப்படுகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பின்னணியில் வருகிறார்கள். தனித்துவ தேவை உள்ளவர்கள் கற்பவர்களாக சேர்க்கப்படுகிறார்கள். கட்டணமில்லாத வீடியோ பாடங்கள் மற்றும் டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான இசைப்பிரியர்கள் பயனடைந்துள்ளனர்.
வித்யா சுப்பிரமணியன் கர்நாடக இசையையும், இதர பாரம்பரிய இந்தியக் கலைகளையும் உலகளவில் கொண்டு செல்கிறார். அதே சமயம் வீட்டிலிருந்து வேலை என்ற வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பெண் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
- டாக்டர் ரம்யா எஸ்.மூர்த்தி, சென்னை, நிர்மயா இன்னவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான சிறார்களுக்கு பணியாற்றி வரும் டாக்டர் ரம்யா 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கற்றல் வேகத்தை அளித்து வருகிறார். நிர்மயா இன்னவேஷன்ஸ் என்பது அவரது நிபுணத்துவம் மற்றும் 5 ஆண்டு ஆராய்ச்சியின் விளைவாகும். ஆட்டிசம் பாதித்த மற்றும் பல வகை பாதிப்புள்ள நபர்களுக்கு உதவி செய்ய சுப்ரயோகா என்ற ரோபோ அடிப்படையிலான பயிற்சிக் கருவிகளை நிர்மயா உருவாக்கி உள்ளார். இதன் மூலம் தினசரி வாழ்க்கைச் செயல்பாடுகளுக்கு பயிற்சி அளிப்பதோடு விரைவான கற்றலுக்கும் வகை செய்யப்படுகிறது. இதற்கு கீதா எனும் கருவி பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நிர்மயா என்பதற்கு சமஸ்கிருதத்தில் “மாற்றத்தை உருவாக்குபவர்” என்பது பொருளாகும். இதனை மெய்ப்பிக்கும் வகையில் சிறப்பு தேவைகள் கொண்ட லட்சக்கணக்கான சிறார்களின் முன்னேற்றத்திற்கும், சுதந்திரமான வாழ்க்கைக்கும் உதவி செய்ய முயற்சி செய்து வருகிறார்.
- தேவிபாலா உமாமகேஸ்வரன், சென்னை, பிக்ஃபிக்ஸ் கேட்ஜெட் கேர் எல்எல்பி
தேவிபாலா உமாமகேஸ்வரனால் நிறுவப்பட்ட பிக்ஃபிக்ஸ் கேட்ஜெட் கேர் எல்எல்பி 2012 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது பிக்ஃபிக்ஸ் என்பது செல்பேசிகள், மடிக்கணினிகள், மேசைக் கணினிகள், டேப்லட்டுகள் ஆகியவற்றுக்கு குறைந்த செலவில் பழுது நீக்குவதில் முதன்மை நிறுவனமாக உள்ளது. விற்பனைக்குப் பிந்தைய நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் நிறுவனமாக இது விளங்குகிறது. சிறிய அளவிலான பழுதுபார்ப்பு மையங்கள் மூலம் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. தங்களின் இணையதளம் மூலம் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பிக்ஃபிக்ஸ் கேட்ஜெட் கேர் நிறுவனத்தின் நோக்கமாகும்.
****
(Release ID: 1808851)
Visitor Counter : 375