சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மனித மூளைகளை 'செல்'களின் மட்டத்தில் வரைபடமாக்க சென்னை ஐஐடி-யில் 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்’ தொடங்கப்பட்டுள்ளது

Posted On: 19 MAR 2022 4:05PM by PIB Chennai

உயர் தெளிவுத்திறன் கொண்ட 'ப்ரெயின் இமேஜிங்'கில் கவனம் செலுத்தி, மனித மூளையை செல்களின் மட்டத்தில் மற்றும் இணைப்பு நிலைகளில் வரைபடமாக்கும் உலகளாவிய திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில், 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை’ சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஐஐடி) தொடங்கியுள்ளது.

 அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மனித மூளை ஆராய்ச்சிக்கான உலகளாவிய முன்னணி மையமாக மாற்றுவதே இந்த புதிய அதிநவீன மையத்தின் நோக்கமாகும்.

 இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன், சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரான திரு. கிரிஸ் கோபாலகிருஷ்ணன், திருமதி. சுதா கோபாலகிருஷ்ணன், மையத்திற்கு தலைமை ஏற்கும் சென்னை ஐஐடி பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில், இந்த மையம் இன்று (19 மார்ச் 2022) திறந்து வைக்கப்பட்து.

 இதுதவிர, நீர் மேலாண்மை மற்றும் கொள்கைக்கான நீரியல் வரைபட மையத்தையும் கே.விஜய்ராகவன் தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்) மற்றும் மையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான பேரா. லிகி பிலிப் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

 நூற்றுக்கணக்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நரம்பியல் பற்றியும், அதிநவீன மூளைத் தரவுகளைக் கணக்கிடுதல், இயந்திரக் கற்றல் நுட்பங்கள் ஆகியவை தொடர்பாகவும் பயிற்சி அளிக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.

 மூளை மையத்தின் தொடக்க நிகழ்வில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே.விஜய்ராகவன் பேசுகையில், "அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற சென்னை ஐஐடி-யும், மருத்துவத் துறையும் இணைந்து செயல்படுவது புரட்சிகரமானதாகும். நாம் முன்னோக்கிச் செல்கையில், நரம்பியல் விஞ்ஞானத்தில் குறிப்பாக மனித மூளையின் செயல்பாடு குறித்த புரிதலில் நாம் தொடக்க நிலையில்தான் இருக்கிறோம். இதில் இருக்கும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை ஐஐடி-யின் 'மூளை மையம்' உதவுவதுடன், உலகிற்கும் இது பயனுள்ளதாக அமையும்” என்றார்.

"பல்வேறு வகையான சிக்கலான திறமைகளை ஒன்றிணைக்கும் திறனை சென்னை ஐஐடி-யின் ஆற்றல்மிக்க தலைமை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சிப் பூங்கா ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. இன்று ஒவ்வொரு கல்வி நிறுவனமும் இதனை மாதிரியாகப் பின்பற்றி செயல்படுத்த விரும்புகிறது” என்றும் அவர் கூறினார்.

இந்த தொழில்நுட்பத் தளத்தைப் பயன்படுத்தி, பல்வேறு வகையான மற்றும் வெவ்வேறு வயதுடைய மனித மூளைகளை உடற்கூறு ஆய்வாக இந்த மையம் இமேஜிங் செய்கிறது. மூன்று வளரும் மூளைகளின் தொடர்பிரிவு செல்-ரெசல்யூஷன் தொகுதிகள் ஏற்கனவே இந்த மையத்திடம் கைவசம் உள்ளன. வளரும் மூளைகளின் பிரத்யேக முதல்தர தரவுத் தொகுப்புகள் பின்னாட்களில் வெளியிடப்படும்.

******* 

 


(Release ID: 1807282) Visitor Counter : 201


Read this release in: English