சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி சென்னை வளாகத்தில் மிகப்பெரிய மாணவர் விடுதி திறப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2022 6:11PM by PIB Chennai
இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி சென்னை வளாகத்தில், ஆயிரத்து 200 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.146.75 கோடி செலவில் கட்டப்பட்ட பிரமாண்ட விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் அனைத்து விடுதிகளுக்கும் ஆறுகளின் பெயரை வைத்துள்ளதை போல, புதிதாக திறக்கப்பட்ட விடுதிக்கு ‘மந்தாகினி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
10 தளங்களுடன் 32,180 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கட்டிடம் பசுமைக்கட்டிடங்களுக்கான 4 நட்சத்திர தகுதியை பெற்றுள்ளது. மின்சார பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ள இந்த பசுமைக் கட்டிடத்தில் சூரிய சக்தி மின்உற்பத்தித் தகடுகள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் தண்ணீரை சூடேற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் அறை மட்டுமின்றி, விடுதி காப்பாளர்கள், உதவிக் காப்பாளர்களுக்கான அலுவலக அறைகள், குடியிருப்புகள், விருந்தினர் அறை, உடற்பயிற்சி மையம், சலவை அறைகள், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஸ்னூக்கர் மற்றும் கேரம் போர்ட் போன்ற விளையாட்டுகளுக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக 10 அறைகளும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பேசிய ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி, ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கென உயர்தர தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதில், ஐஐடி நிர்வாகம் மிகுந்த பெருமிதம் அடைவதாக கூறினார். தோட்டங்கள் மற்றும் கழிவறைகளுக்கு மறு சுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டு இருப்பதுடன் நிலத்திலும், கட்டிடத்தின் மேல் தளத்திலும் விழும் மழைநீரை சேகரித்து சுத்திகரிப்பு செய்து குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதாகவும், பேராசிரியர் காமகோடி தெரிவித்தார்.
இந்த கட்டிடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேசிய பொறியியல் பிரிவுத் தலைவர் பேராசிரியர் எஸ் ஏ சன்னாசிராஜ், விடுதிக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறை மற்றும் நடைபாதைகளில் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டு இருப்பதுடன், மாணவர்கள் இயற்கையான முறையில் ஓய்வெடுக்கும் விதமாக, ஒளி புகக்கூடிய மேற்கூரைகளை கொண்ட பகுதி ஒன்றும், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.


*************
(வெளியீட்டு அடையாள எண்: 1800085)
வருகையாளர் எண்ணிக்கை : 261