இடுகை இடப்பட்ட நாள்:
21 JAN 2022 6:10PM by PIB Chennai
இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ சார்பில் காணொலி வாயிலாக நடைபெற்ற, ‘எதிர்கால தேசிய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மீன் வளம் மீன் வள முதலீட்டுக்கான மாநாட்டில்’ மத்திய மீன்வளம். கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், இந்த மாநாட்டை நடத்துவதற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார். உலக மீன் உற்பத்தியில் இந்தியா 8% அளவுக்கு பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் கூறினார். இந்திய மீன் வளத்துறையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் என்றார். இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் இந்திய மீன்வளத்துறையை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீன் வளத்துறையின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு 2014 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மீன்வளத்துறையின் மேம்பாடு மற்றும் 2.8 கோடி மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதே அரசின் நோக்கம். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஆட்சியில், இந்தியா மீன்வளத்துறையில் பெரும் முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு மீன் வளத்துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு பன்மடங்கு முதலீடு செய்துள்ளது. நாட்டின் மீன்வளத்தை முழுமையாக பயன்படுத்த ஏதுவாக, நீலப்புரட்சி, மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் போன்ற திட்டங்களை உருவாக்கியிருப்பதுடன் 2019 ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தில் மீன் வளத்திற்கென தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதையும் திரு.எல்.முருகன் சுட்டிக்காட்டினார்.
மீன்வளத்துறையில் தற்சார்பு அடையும் விதமாக 20,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மீன்வளத்துறையை நீடித்த வளர்ச்சியுடையதாக மாற்றி 2.8 கோடி மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மீன் உற்பத்தி அளவை 220 லட்சம் டன்னாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த இலக்கை அடைய ஆழ்கடல் மீன்வளத்துடன் உள்நாட்டு மீன் வளர்ப்பையும் மேம்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் நவீன மற்றும் குறைந்த செலவிலான மீன்பிடி தொழில்நுட்பங்களை பின்பற்றுதல், தடையற்ற குளிர்பதன வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், ஐஸ் தொழிற்சாலைகள், மீன் பதப்படுத்தும் பிரிவுகள், மீன் உபபொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் இந்தத் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு மீன் உற்பத்தி அளவு கணிசமாக அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட மத்திய இணையமைச்சர், நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 70 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டு மீன் வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மீன் உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில் சந்தை விரிவாக்கத்திற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் மீன் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மீனவர்களின் வருவாய் மற்றும் அவர்களது பணி நிலையை மேம்படுத்தி அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்திய மீன்வளத்துறையை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு பாடுபட்டு வருவதாகவும் டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.


•••••••