சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் பங்களிப்பு அவசியம்
Posted On:
10 JAN 2022 3:39PM by PIB Chennai
தமிழகத்தில் திடீரென்று கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதற்கான காரணம் ஒமிக்ரான் உருமாற்றமே என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் இன்று நடத்தப்பட்ட “ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பு, தகுதி உள்ளோருக்கான தடுப்பூசி, கொரோனா விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை குறித்த ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கில்” கலந்து கொண்டு பேசிய அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு சதவீத நோயாளிகளே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக கூறினார்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்திருப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மாநில அரசு முனைப்புடன் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கான இத்தகைய விழிப்புணர்வு பயிலரங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் வியாபார நோக்கில் பரபரப்புக்காக செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு உணர்த்தும் வகையிலான பயிலரங்காக இது அமையும் என்று தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
கொரோனா போன்ற பெருந்தொற்று சவால்களை எதிர்கொள்ளும் போது பொதுமக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். தகவல்களை வெளியிடுவதற்கு முன்னதாக அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொண்டு, நம்பகமான தகவல்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று அவர் பத்திரிகையாளர்களை கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அதே நேரத்தில் அவர்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஊடகங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பொது சுகாதாரம் என்பது மக்களுக்காக மக்களால் பேணப்பட வேண்டியது என்பதால், பொதுமக்களின் பங்களிப்பு இன்றி பொது சுகாதாரத்தை முழு அளவில் உறுதி செய்வது இயலாத காரியம் என்பதை நமக்கு கொரோனா நன்கு உணர்த்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே கொரோனா தொற்று முதல் இரண்டு அலைகளிலிருந்து தமிழகம் வெற்றிகரமாக மீண்டெழுந்ததை போல, இந்த முறையின் 3 ஆவது அலையிலிருந்தும் மீண்டெழும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பொது சுகாதாரத் துறை இயக்குநர் திரு செல்வ விநாயகம், கொரோனா தொற்று பற்றி அனுதினமும் ஒரு புதிய தகவல் வெளியாகி கொண்டிருப்பதற்கு இந்த துறையின் வல்லுநர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருவதுதான் காரணம் என்று குறிப்பிட்டார்.
இப்படி புதுப்புது கண்டுபிடிப்புகள் வெளியாவதோடு மட்டுமின்றி அரசும், ஊடகங்களும் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் இந்த தகவல்கள் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். சரியான நேரத்தில் பொதுமக்களிடையே தேவையான தகவல்களை எடுத்துச் செல்லும் ஊடகங்களை அவர் பாராட்டினார்.
கொரோனா தொற்றுப் பற்றிய தகவல்கள் மட்டுமின்றி தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வையும் ஊடகங்கள் பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோய் பிரிவு பேராசிரியர் டாக்டர் சி ரவிச்சந்திரன் கூறுகையில், உருமாற்றம் அடைவது தொற்றின் இயல்பே என்றும், இதுகுறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் கூறினார். இந்த முறையும் இந்த பெருந்தொற்று தமிழகத்தில் ஒரு உச்சத்தை அடைந்து பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கும் என்று அவர் நம்பிக்கை அளித்தார். இது உலகம் முழுவதும் காணப்படக்கூடிய பொதுவான நிலவரம் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கொரோனா தொற்றுக் கூட சாதாரண இன்ஃப்ளூயன்சா எனப்படும் ஜலதோஷம் போன்று சாதாரண நோயாக நம்மிடையே நிலவக்கூடும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு உருமாற்றத்தின் போதும், மருத்துவ அறிவியலாளர்கள் அதனுடைய மரபணு வகைப்படுத்துதல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள் என்றும், இதன்காரணமாகத்தான் உருமாற்றம் குறித்த பல்வேறு தகவல்கள் ஆய்வுகள் மூலம் கிடைக்கப் பெற்று அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மாற்ற முடிகிறது என்றும் குறிப்பிட்டார்,
ஒமிக்ரான் காரணமாக ஏற்பட்டுள்ள 3 ஆவது அலையிலும் பரவல் வேகம் முதல் இரண்டு அலைகளை காட்டிலும் மிக அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறினார். இதன்காரணமாக தமிழகத்தில் ஒருநாளைக்கு புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை எட்டக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமூகப் பரவல் ஏற்படுவதை உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
இது தமிழகத்தில் மட்டுமின்றி, நாடுமுழுவதும் காணப்படும் நிலை என்றும் அவர் தெரிவித்தார். ஒமிக்ரானை பொறுத்தவரை வெறும் 1.6 சதவீத தொற்றாளர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் காரணமாக பலர் பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்வருவதில்லை என்றும் அவர் குறை கூறினார்.
இதுபோன்ற விவகாரங்களில் ஊடகங்கள் கவனம் செலுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் சமூகப் பரவலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பூசிகள் தடுத்து விடும் என்பது தவறான தகவல் என்றும், தடுப்பூசிகள் கொரோனா தொற்று பாதிப்பை அதிகரிக்காமல் தடுக்கக்கூடிய வல்லமை பெற்றது என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை தடுப்பூசிகள் தவிர்க்கும் என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தமிழகம் சற்றே பின்தங்கியிருப்பதாக கூறிய மருத்துவர் ரவிச்சந்திரன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் வெறும் 40 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக கூறினார். ஒமிக்ரான் என்பது லேசான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொற்று என்றும், ஆனால் அதன் பரவல் வேகம் கவலை அளிப்பதாக இருக்கிறது என்றும், அதனால் இந்த தொற்றுப்பரவலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் தரேஸ் அகமது ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதை சமாளிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை விவரித்தார். மேலும், பிறநோய்களை சமாளிப்பது குறித்து தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க ஊரக அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுகாதார இயக்க மருத்துவ அலுவலர் டாக்டர். விடுதலைவிரும்பி கொரோனாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விவரித்தார்.
பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநர் திரு. வெங்கடேஸ்வர், கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, இயக்குநர் திரு குருபாபு பலராமன், மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திரு ஜெ காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
**********
(Release ID: 1788921)
Visitor Counter : 281