புவி அறிவியல் அமைச்சகம்

புயல் எச்சரிக்கை மையங்கள் மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை: அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

Posted On: 01 DEC 2021 1:33PM by PIB Chennai

நாட்டின் 9 கடற்கரையோர மாநிலங்கள், கடலோர யூனியன் பிரதேசங்கள், தீவுப் பகுதிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கை மையங்களைக் கொண்டுள்ளன.  கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளில் சென்னை, மும்பை, கொல்கத்தா உட்பட 7  புயல் எச்சரிக்கை  மையங்களும், புதுதில்லியில் உள்ள  இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மையப்படுத்தப்பட்ட புயல் எச்சரிக்கைப் பிரிவும் உள்ளதாகப் புவி அறிவியல் இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில்  கூறியுள்ளார்.    

நாடுமுழுவதும் மின்னல் தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை  கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் போக்கினை சமீபத்திய ஆய்வுகள் காட்டுவதாக மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.  28 மாநிலங்களில் 2018 ஆம் ஆண்டு மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,357 ஆகவும், 2020-ல் 2,862 ஆகவும் இருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பீகாரில் 2018 ஆம் ஆண்டு 177-ஆக இருந்த உயிரிழப்பு 2020-ல் 430 ஆக அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் இதேகாலத்தில் 82-லிருந்து 64 ஆகக் குறைந்துள்ளது என்று அமைச்சரின் பதிலுக்கான இணைப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும்  இந்தக் காலக்கட்டத்தில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

**********



(Release ID: 1777008) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Bengali