தேர்தல் ஆணையம்

தேர்தல் மேலாண்மை அமைப்புகள் வாக்களர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையர்

Posted On: 01 DEC 2021 11:15AM by PIB Chennai

பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்களின் தேர்தல் பங்கேற்பை மேம்படுத்துதல்: சிறந்த நடைமுறைகள் மற்றும் புதிய முயற்சிகளைப் பகிர்தல்’ என்ற கருப்பொருளில் சர்வதேச கருத்தரங்கு ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் புதுதில்லியில் இன்று ஏற்பாடு செய்தது.

ஏ-வெப் அமைப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை பொறுப்பு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வலையரங்கில், 24 நாடுகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள், 4 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 20 தூதர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்புரை ஆற்றிய ஏ-வெப்பின் தற்போதைய தலைவரான, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா, மற்ற தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் நடைமுறைகள் மற்றும் அனுபவங்களிலிருந்து சிறந்தவற்றை அடையாளம் காணவும் அறியவும் இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

தேர்தல்களை அனைவரும் அணுகக்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய முறையாக மாற்றுவதற்கும் பங்கேற்பு மிக்க தேர்தல்களை உறுதிசெய்வதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய தேர்தல்களில் பங்கேற்பதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் சவால்களின் வரலாற்றுக் கண்ணோட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, சுதந்திரத்திற்குப் பிறகான 7 தசாப்தங்கள் மற்றும் 17 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்தியாவில் பெண்களின் பங்கேற்பு ஆண்களை விட அதிகமாக உள்ளது என்றும் 2019 பொதுத் தேர்தலில் இது 67%-க்கும் அதிகமாக இருந்தது என்று திரு சந்திரா கூறினார்.

பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்த திரு சந்திரா, அதிக பெண்களை வாக்குச் சாவடி அதிகாரிகளாக நியமித்தல், அதிக எண்ணிக்கையிலான பெண்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச் சாவடிகள், வாக்குச் சாவடிகளில் காப்பக வசதி, தனி கழிப்பறைகள் மற்றும் வாக்குச் சாவடிகளில் காத்திருப்புப் பகுதி, பதிவு செய்வதை எளிதாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் கொவிட்-பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டார்.

73.6 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட பீகார், அசாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இத்தகைய அஞ்சல் வாக்குச் சீட்டு வசதி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775386

 

 

****


(Release ID: 1776695)



(Release ID: 1776823) Visitor Counter : 170