சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மீனவர்களுக்கு உதவ, விற்பனைத் துறையில் புதுமையான மற்றும் அறிவியல் பூர்வ யோசனைகளை பின்பற்ற வேண்டும்: லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய அமைச்சர் திரு எல். முருகன் உத்தரவு

Posted On: 31 OCT 2021 9:15PM by PIB Chennai

மீனவர்களுக்கு உதவ, விற்பனைத் துறையில் புதுமையான மற்றும் அறிவியல் பூர்வ யோசனைகளை பின்பற்ற வேண்டும் என  லட்சத்தீவு நிர்வாகத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன் உத்தரவிட்டார்.

லட்சத்தீவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் திரு. எல். முருகன் இன்று காலை பங்காராம் தீவில் இருந்து அகத்திக்கு வந்தார். அங்கு தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட சைக்கிள் பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் பங்கேற்ற சிறுவர்களுடன் இணைந்து, மத்திய அமைச்சரும் சிறிது தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அதன்பின் லட்சத்தீவில் உள்ள டுனா மீன் பதப்படுத்தும் பகுதிகளை மத்திய அமைச்சர் திரு. எல். முருகன் பார்வையிட்டார். அங்கு பாரம்பரிய முறையில் மீன் பதப்படுத்தும் முறையை மீனவர்கள் பின்பற்றுகின்றனர்.  மீனவர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர், மீன் பதப்படுத்தும் தொழிலில் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்தார்.  மீன் பதப்படுத்துதல் மற்றும் அதை விற்பனை செய்வதில் உள்ள பிரச்னைகளை மீனவர்கள் விளக்கினர்.  இதைக் கேட்ட மத்திய அமைச்சர், இப்பிரச்னைகளை விரைவில் தீர்க்க உடன் வந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.  மேலும்,  மீன் விற்பனைத்துறையில் புதுமையான மற்றும் அறிவியல்பூர்வமான யோசனைகளை பின்பற்றவும்அடிப்படை விலையை உறுதி செய்ய, மீன் விற்பனைத் துறையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கவும் லட்சத்தீவு நிர்வாக அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் உத்தரவிட்டார்.

மத்திய அமைச்சருடன் லட்சத்தீவு நிர்வாகியின் ஆலோசகர் திரு ஏ.அன்பரசு, மீன்வளத்துறை செயலாளர்கள் திரு கே.டி.தாமோதர், திரு. ஓ.பி.மிஸ்ரா மற்றும் இதர மூத்த அதிகாரிகள் உடன் சென்றனர். அதன்பின் மீனவர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது, லட்சத்தீவு மீன்வளத்துறையில் சந்திக்கும் பிரச்னைகளை ஒவ்வொரு மீனவரிடமும் கேட்டறிந்தார். அகத்தி தீவு படகுத்துறை, மற்றும் நுழைவுப் பகுதியில் அவர் மரக்கன்றுகளை நட்டார். அங்குள்ள பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளையும் மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.

முன்னதாக முதல்நாள் பயணத்தில் லட்சத்தீவு மீனவர்களுடன், கலந்துரையாடிய மத்திய அமைச்சர், மீன்வளத்துறையில் லட்சத்தீவின்  தற்சார்பை உறுதி செய்வதுதான் பிரதமர் திரு நரேந்திரமோடியின் தொலை நோக்கு”  என கூறினார்.

இரண்டாம் நாள் பயணத்தில் கவராத்தி தீவில் கடற்பாசி மையத்தை பார்வையிட்டபோது, சுய உதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை கேட்டறிந்தார்.  ‘‘லட்சத்தீவு கடலோர பகுதியில் கடற்பாசி உற்பத்திக்கு சிறந்த சாத்தியங்கள் உள்ளன எனவும், இது இங்குள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்புகள், பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறது. இதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்துகிறது’’ என மத்திய அமைச்சர் கூறினார். 

உள்ளூர் மக்களுக்கு பொருளாதார மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக, லட்சத்தீவை நாட்டின் கடற்பாசி மையமாக மேம்படுத்த தேவையான உதவிகள் மற்றும் ஆதரவை பிரதமர் திரு நரேந்திரமோடியின் தலைமையின் கீழ் மீன்வளத்துறை அமைச்சகம் வழங்கும் என அவர் உறுதி அளித்தார்.

லட்சத்தீவில் 3 நாள் பயணத்தை முடித்த மத்திய அமைச்சர் திரு. எல். முருகன் அகத்தி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை கொச்சி திரும்பினார்.

*********



(Release ID: 1768264) Visitor Counter : 117


Read this release in: English