இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2021 4:03PM by PIB Chennai
சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு வந்த 271 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு வந்த நான்கு பார்சல்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து அதில் இரண்டு பார்சல்களில் எம்டிஎம்ஏ என்ற போதை மாத்திரைகள் இருந்தன. மற்ற இரண்டு பார்சல்களில் 142 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
நெதர்லாந்திலிருந்து வந்த முதல் பார்சலில் ஆந்திராவைச் சேர்ந்த நபரின் பெயர் இருந்தது. அந்த பார்சலைத் திறந்து பார்த்தபோது ஒரு வாழ்த்து அட்டையில் பத்து பச்சை நிற மாத்திரைகள் இருந்தன. இவை எம்டிஎம்ஏ போதைப் மாத்திரைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன. மேலும், 7 கிராம் அளவுக்கு மெத்கிறிஸ்டல் மற்றும் ஒரு கிராம் அளவுக்கு ஆம்பத்டமைன் போதைப் பொருளும் இருந்தது.
அமெரிக்காவிலிருந்து ஆந்திராவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சலில் 132 கிராம் கஞ்சா கண்டுப்பிடிக்கப்பட்டது. மற்றொரு பார்சலில் பத்து கிராம் கஞ்சா இருந்தது. நெதர்லாந்திலிருந்து வந்த மற்றொரு பார்சலில் 261 பழுப்பு நிற மாத்திரைகள் (118 கிராம்) இருந்தன. இவையும் எம்டிஎம்ஏ வகை போதை மாத்திரைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மொத்தம் இந்த பார்சல்களில் 131 கிராம் போதை மாத்திரைகளும், 142 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை ஆணையர் தெரிவித்துள்ளார்.
***