சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல்
Posted On:
17 OCT 2021 8:11PM by PIB Chennai
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் உடுப்பியில் 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மங்களூருவில் உள்ள பைக்கம்பாடியில் ஐஸ் ஆலையை அவர் பார்வையிட்டார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு குளிர்சாதன மற்றும் வெப்பப் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கான அனுமதி உத்தரவை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
குலாய் பகுதியில் உள்ள மிகப்பெரிய குளிர்பதனக் கிடங்கு, தண்ணீர் பாவியில் உள்ள மிதவை கூண்டு மீன் வளர்ப்பு மையங்கள் ஆகியவற்றையும் டாக்டர் முருகன் பார்வையிட்டார். பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டப் பயனாளிகள் மற்றும் மோட்டார் படகு உரிமையாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். மால்பே மீன்பிடித் துறைமுகத்தை பார்வையிட்ட டாக்டர் முருகன், உடுப்பியில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் குறித்தும், இத்திட்டம் கடலோரப் பகுதி மக்களை சென்றடைந்துள்ளது குறித்தும் விளக்கினார்.
பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், பகுதிகள் அடிப்படையிலான அணுகுமுறையில் முக்கியமாக கவனம் செலுத்தி, மீன்பிடித் தொகுப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டத்தில் கடற்பாசி வளர்ப்பு மற்றும் அழகு மீன்கள் வளர்ப்பு போன்ற வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும். தரமான இனப்பெருக்கம், முட்டைகள் மற்றும் தீவனம், இனங்களை பல்வகைப்படுத்தல், முக்கிய உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்தல் நெட்வொர்க் அமைப்பு போன்றவற்றில் இத்திட்டம் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
தற்போதுவரை பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக மீன்வளத்துறை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் எல். முருகன் கூறினார்.
*********
(Release ID: 1764568)
Visitor Counter : 212