சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் ஈயத்தால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

Posted On: 06 SEP 2021 12:45PM by PIB Chennai

27.5 கோடி இந்தியக் குழந்தைகள் உட்பட, உலகில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் ஈயத்தால் பாதிக்கப்படுவதாக யூனிசெஃபின் அறிக்கை கண்டறிந்துள்ளது. இதனால், ரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகமாகி, புத்திக்கூர்மை, கவனம் ஆகியவற்றைப் பாதிப்பதுடன், ரத்த சோகை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களும் ஏற்படுகின்றன.

சென்னை ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், ஈய மாசுபாட்டைக் குறைக்க இந்தியாவுக்கு உதவும் பொருத்தமான கொள்கைகளையும், கருவிகளையும் கண்டறிய ஓர் ஆய்வு நடத்துகின்றனர். ஈய மாசுபாடு மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன்  சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் என்பதால் இந்தியாவில் ஈயத்தை மறுசுழற்சி செய்வது குறித்த ஆய்வைக் கூட்டாக மேற்கொண்டுள்ளனர்.

முறையான வழியில் மறுசுழற்சி செய்யப் பயிற்சியின்றி, ஈயத்தை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள், ஈயம்-அமில பேட்டரிகளை உடைத்து, மண் மற்றும் சுற்றுப்புறங்களில் அமிலம் மற்றும் ஈய மாசை உருவாக்குகின்றனர். மேலும், திறந்த உலைகளில் ஈயத்தை உருக்குவதால் விஷ வாயுக்கள் காற்றில் கலக்கின்றன.  இது, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, இதில்  ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.

ஆனால், இதில் செலவு குறைவாக இருப்பதால், இது அதிகம் கவனத்தைக் கவர்கிறது. இப்படி முறைசாராச் செயல்முறைகளும் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளும் வளரும் நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன. இதற்குக் கடுமையான சட்ட விதிமுறைகள் இல்லாமையும், அதிக செலவும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 

ஒழுங்குபடுத்தப்பட்ட மறுசுழற்சித் துறையில்  வரியைக் குறைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட மறுசுழற்சி மற்றும் மறு உற்பத்தித் துறைகளுக்கு மானியங்களை வழங்குதல் போன்ற கொள்கை வழிகாட்டுதல்கள் ஈயம்-அமில பேட்டரி மறுசுழற்சி மூலம் ஈய மாசுபாட்டைக் குறைக்கும் என்று இந்த ஆய்வு பரிந்துரைத்தது. முறையான மறு உற்பத்தித் துறைக்கு அதிக மானியம் வழங்கப்படுவது ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மறுசுழற்சித் துறைகள் முடங்க வழிவகுக்கும் என்றும் இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித் துறையின் பேராசிரியர் டாக்டர் ஆர்.கே.அமித், கான்பூர் ஐஐடி தொழில் மற்றும் மேலாண்மைப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் பி விபின், ஐ ஐ டி கான்பூரின் இயந்திரப் பொறியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஜனகராஜன் ராம்குமார்  மற்றும் ஐஐடி கான்பூரிலிருந்து திரு. பிரம்மேஷ் விநாயக் ஜோஷி ஆகியோர் அடங்குவர். இந்தக் குழு, தனது ஆய்வு முடிவுகளை பெருமதிப்புமிக்க சர்வதேச ஆராய்ச்சி இதழான Resources, Conservation and Recycling. -ல் வெளியிட்டது.

ஈய மாசு பற்றிய ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய, ஐஐடி மெட்ராஸின் மேலாண்மைக் கல்வித் துறைப் பேராசிரியர் ஆர்.கே. அமித்,  "தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஈயத்தின் இருப்பு இல்லாததால், பயன்படுத்தப்பட்ட பாட்டரிகளின் மறு பயன்பாடு அவசியமாகிறது. இருப்பினும், அறிவியல்பூர்வமான முறையில், ஒழுங்குபடுத்தப்படாத அமைப்புகள் இதைச் செய்யும் போது, அதிக அளவு ஈயம் வெளியேற்றப்படுவதால் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. இந்தியாவில், இந்த மறு சுழற்சியை ஒழுங்குபடுத்தப்பட்ட துறையாக மாற்றுவதில் மறுசீரமைப்பு வணிகத்தை ஒழுங்கமைக்கப்படாத இந்தியாவில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றுவதன் தாக்கத்தை அளவிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார்.

யூனிசெஃப்ஃபின் “த டாக்ஸிக் ட்ரூத்: சில்ரன்ஸ் எக்ஸ்போஷர் டு லெட் பொல்யூஷன் அண்டர்மைன்ஸ் அ ஜெனரெஷன் ஆஃப் பொடென்ஷியல்” (‘The Toxic Truth: Children’s exposure to lead pollution undermines a generation of potential’) என்ற  ஒரு அறிக்கை, 27.5 கோடி இந்தியக் குழந்தைகள் உட்பட உலகின் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் இரத்தத்தில் ஈயத்தின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 5  மைக்ரோகிராம்  அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால், அது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிவிக்கிறது. அதிக ஈய அளவுகள், பெரியவர்களுக்கும் கேடு விளைவிக்கும் என்றாலும், குழந்தைகளிடம் அறிவுத் திறன் குறைபாடு, கவனச் சிதறல், ரத்தசோகை, சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள் உட்பட, பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களுக்கான வரியைக் குறைத்தல், அவர்களுக்கும், முறையான பேட்டரி மறு உற்பத்தியாளர்களுக்கும் அவர்களது மறு சுழற்சி முறையின் செயல்திறனைப் பொருத்து, மானியங்களை அதிகரித்தல் போன்ற கொள்கைகளின் தாக்கத்தை, திரு பிரம்மேஷ் விநாயக் ஜோஷி, டாக்டர் பி விபின், டாக்டர் ஜனகராஜன் ராம்குமார் மற்றும் டாக்டர் ஆர்.கே.அமித் ஆகியோர் மதிப்பீடு செய்தனர். பயன்படுத்தப்பட்ட ஈய - அமில பேட்டரிகளை மறுசுழற்சி செய்வதில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கங்களை ஆராய ஆராய்ச்சியாளர்கள் ஒரு அமைப்பு இயக்கவியல் மாதிரியைப் பயன்படுத்தினர்.

பேராசிரியர் ஆர் கே அமித் மேலும் கூறுகையில், "நடைமுறைப்படுத்தல் என்ற கோணத்தில்,  கொள்கை வகுப்பாளர்கள் இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இந்தியாவில் லேப்  மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கான கொள்கைகள் மற்றும் விதிகளை வடிவமைக்கலாம். இந்தக் கொள்கைகளின் விளைவாக, முறைசாராத் துறையில் ஏற்படக்கூடிய வேலை வாய்ப்பிழப்பு பற்றியும் இந்தத் தொழிலாளர்களை ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்புக்குள் கொண்டு வருவது பற்றியும்  எதிர்கால ஆராய்ச்சி கவனத்தில் கொள்ளும்.

வண்ணப்பூச்சுகள், அழகுசாதனப் பொருட்கள், சாயங்கள், வெடிமருந்துகள் மற்றும் நகைகள் போன்ற பல்வேறு தொழில்களில் ஈயம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால்,  
85% உற்பத்தியைப் பயன்படுத்தும் பேட்டரித் துறை இந்த உலோகத்தின் முக்கிய நுகர்வோராக உள்ளது. பேட்டரி கழிவு மேலாண்மை, கையாளுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த பல விதிகள் அந்தந்த நாடுகளில் ஈய மாசுபாட்டைக் கையாள்வதற்கு உரிய நேரத்தில் விதிக்கப்படுகின்றன.

 

இந்த உலோகத்தின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் அதனால் ஏற்படும் மாசுபாட்டைக் கையாளவும் ஒரு நல்ல தீர்வாக மறுசுழற்சி முன்வைக்கப்பட்டது. இருப்பினும், ஈயத்தின் சரியான மறுசுழற்சி  இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளுடன் முறைசாரா அமைப்புகள் பல காளான்களாக முளைத்து வருவது தான், என்று சென்னை ஐ.ஐ,டி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

###


(Release ID: 1752501) Visitor Counter : 157
Read this release in: English