ஜல்சக்தி அமைச்சகம்

Hydrometric Observations தண்ணீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளில் மறுசீரமைப்பு போன்றவற்றிற்காக மேற்கொள்ளப்படும் ஏராளமான நடவடிக்கைகள்

Posted On: 22 JUL 2021 3:23PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் பின்வருமாறு:

தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள்:

நாட்டின் எந்த ஒரு பகுதியின் தண்ணீர் இருப்பின் ஆண்டின் சராசரி அளவு நீர்- காலநிலை மற்றும் புவியியல் அம்சங்களை பெரிதும் சார்ந்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தால் நாட்டில் தனிநபருக்கான தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் மற்றும் மாநில அரசுகளால், நிலத்தடி தண்ணீர் வளங்கள் குறிப்பிட்ட கால அளவில் மதிப்பீடு செய்யப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி நாடு முழுவதும் மொத்தம் மதிப்பீடு செய்யப்பட்ட 6965 அலகுகளில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 அலகுகள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. நீர் வளங்களின் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் முறையான மேலாண்மை ஆகியவை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பொறுப்பில் இயங்குகிறது. பல்வேறு திட்டங்களின் வாயிலாக தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தண்ணீரின் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு, பாரம்பரிய மற்றும் இதர நீர் நிலைகள்/ குளங்களை புதுப்பித்தல், ஆழ்துளை கிணற்றின் மறுபயன்பாடு, மரம் வளர்ப்பு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு சர்வதேச தண்ணீர் தினமான மார்ச் 22-ஆம் தேதி, ஜல் சக்தி அபியான்: மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தினார். விவசாயத்திற்கு தண்ணீரை முறையாக பயன்படுத்தவும் தண்ணீர் குறைவாக தேவைப்படும் பயிர்களில் கவனம் செலுத்துமாறும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலானசாஹி ஃபசல்பிரச்சாரத்தை தேசிய தண்ணீர் இயக்கம் துவக்கியுள்ளது.

நிதியாண்டு 2015-16 முதல் நிதியாண்டு 2019- 20 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நகரங்களில் புத்தாக்க மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான இயக்கத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் என்ற ஜல் ஜீவன் இயக்கத்தின்  கீழ் 2024 ஆம் ஆண்டிற்குள் பழங்குடி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து ஊரக வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றி வருகிறது.

நீர்நிலைகளைப் புதுப்பித்தல்:

மக்கள்தொகை பெருக்கம், தண்ணீர் பயன்பாடு அதிகரிப்பு, தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்து வருகிறது. தண்ணீரை சேமிப்பதற்காக ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர் வளங்களின் நிலையான மேலாண்மைக்காக நீர் தேக்கங்களின் வரைபடம் எடுத்தல் மற்றும் மேலாண்மைக்கான திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. அதேபோல ரூ.6000 கோடி செலவில் அடல் புஜல் யோஜனா திட்டத்தை ஜல்சக்தி அமைச்சகத்தின் நீர் ஆராய்ச்சிகள் துறை அமல்படுத்தி வருகிறது

 நீர்நிலைகளின் மறுசீரமைப்பு:

நீர்நிலைகளின் செப்பனிடுதல், புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்புத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை மறுசீரமைப்பதற்கான ஆதரவை மத்திய அரசு அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் XII-வது திட்டம் முதல் பல்வேறு மாநிலங்களில் ரூ. 1914.86 கோடி மதிப்பில் 2228 நீர்நிலைகளை மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு மார்ச் மாதம் வரை இதற்காக ரூ.469.69 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. 1549 நீர்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 2021 மார்ச் மாதம் வரை தமிழகத்திற்கு ரூ. 34.25 கோடி வழங்கப்பட்டு 153 நீர்நிலைகளை மறு சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நீர்மானியியல்  கண்காணித்தல்:

நீர் வளங்கள் மேலாண்மைக்கான திட்டமிடுதலுக்கும் அதை நடைமுறைப் படுத்துவதற்கும் நீண்டகால நீர்மானியியல் கண்காணிப்பு மிகவும் அவசியமாகிறது. மத்திய நீர் ஆணையம், 23 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வெள்ளம்/ நீர்வரத்து முன்னறிவிப்பிற்கு இத்தகைய நீர்மானியியல் கண்காணிப்பைப் பயன்படுத்தி வருகிறது. ஒரு வருடத்தில்  வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை  அறிவதற்கும் இந்த நீர்மானியியல் பெரிதும் உதவியாக இருக்கும்.

மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடி விவகாரங்கள் துறைகளின் இணை அமைச்சர் திரு பிஷ்வேஷ்வர் துது மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதில்கள் பின்வருமாறு:

யமுனை ஆற்றில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கை:

யமுனை ஆற்றில் ஏற்படும் மாசை கட்டுப்படுத்துவதற்காக நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ரூ. 4355 கோடி மதிப்பில் 24 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஹரியானா மற்றும் தில்லியில் தலா இரண்டு, உத்தரப்பிரதேசத்தில் ஒன்று என மொத்தம் ஐந்து திட்டங்கள் இதுவரை நிறைவடைந்துள்ளன.

நீர்ப்பாசன வேளாண்மையின் உற்பத்தித் திறன்:

நீர்ப்பாசன வேளாண்மை மற்றும் தண்ணீர் வளங்களின் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு 2018-2025 வரையிலான 7 ஆண்டு காலத்திற்கு 318 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, ரூ. 2073 கோடி (மொத்த திட்ட தொகையில் 70%) கடனாக வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது. 07.07.2021 வரை 133.18 மில்லியன் அமெரிக்க டாலர்  வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பங்கு 136 மில்லியன் அமெரிக்க டாலராகும் (30%). இது மாநில அரசின் திட்டம் என்பதால் மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்காது.

நமாமி கங்கே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள்:

நமாமி கங்கே திட்டத்தின் கீழ் பெருநிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கையாக தூய்மை கங்கை நிதியின் கீழ் பெரு நிறுவனங்கள் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். காட்களின் கட்டுமானம்/ நவீனமயமாக்கல்/ விரிவுபடுத்தல், தூய்மைப்படுத்தல், முக்கியமான காட்களில் வசதிகளை ஏற்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை, மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மழைநீர் சேகரிப்பு திட்டம்:

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜல் சக்தி அபியான் பிரச்சாரத்தின் கீழ் 256 மாவட்டங்களில் 2836 வட்டங்களில் 1592 வட்டங்களை உள்ளடக்கிய திட்டத்தை தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், பாரம்பரிய மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்காக ஜல் சக்தி அபியான்: மழைநீர் சேகரிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தண்ணீரை சேமிப்பதற்கான அறிவியல் சார்ந்த திட்டத்திற்காக ரூ. 2 லட்சம் வரை ஊக்கத்தொகை அடிப்படையாகக்கொண்ட நிதி உதவியை ஜல்சக்தி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737717

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737713

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737707

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737704

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737703

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737701

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737700

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737702

 

-------


(Release ID: 1737848) Visitor Counter : 577


Read this release in: English