சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி (IISc) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான என்பிடிஇஎல் (NPTEL - National Programme on Technology Enabled Learning) மின்சார வாகனங்கள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி குறித்த புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்துகிறது

Posted On: 22 JUL 2021 2:27PM by PIB Chennai

ஐஐடி, ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கற்றல் குறித்த தேசிய திட்டம் (என்.பி.டி.இ.எல்), மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐ.ஓ.டி, வணிக மற்றும் நிலையான மேம்பாட்டுக்கான வடிவமைப்பு, ஆகிய பாடத் திட்டங்களை ஜூலை 2021 செமஸ்டருக்கு ஸ்வயம் தளம் (SWAYAM platform) மூலம் வழங்குகிறது.

 

என்.பி.டி.இ.எல் படிப்புகள் மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. ஜூலை - டிசம்பர் 2021 செமஸ்டருக்கான சேர்க்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. என்.பி.டி.இ.எல் படிப்புகளின் முதல் தொகுப்பில் சேர கடைசி தேதி 2021 ஆகஸ்ட் 2 ஆகும்.

இது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. பேராசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் https://swayam.gov.in/NPTELமூலம் என்.பி.டி.இ.எல் படிப்புகளில் சேரலாம்.

ஆன்லைன் முறையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு  500க்கும் மேற்பட்ட படிப்புகளை, என்.பி.டி.இ.எல் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. யார் வேண்டுமானாலும் எங்கும், எந்த நேரத்திலும் கற்கக்கூடிய சாத்தியம், கற்பித்தல்-கற்றல் செயல்முறையை மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும், புதுமையானதாகவும் ஆக்கியுள்ளது. இந்த ஆன்லைன் கல்வி முறை COVID-19 தொற்றுக் காலத்தில் மிகவும் பயனளிப்பதாக விளங்குகிறது.

என்.பி.டி.இ.எல்-இன் தனித்துவமான அம்சங்களை எடுத்துரைத், ஐ.ஐ.டி மெட்ராஸின் என்.பி.டெல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன், “ஸ்வயம்-என்.பி.டெல் தற்போது நாடு முழுவதும் பொறியியல், கலை, அறிவியல், வர்த்தகம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் 4,000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த என்.பி.டி.இ.எல் படிப்புகளில் சேர்கின்றனர். என்.பி.டி.இ.எல் இயங்குதளத்தில் பிரபலமான சில படிப்புகள், பொறியாளர்களுக்கான டேட்டா சயன்ஸ், பைத்தான், C, C++, இல்நிரலாக்கத்திற்கான படிப்புகள், மெஷின் லர்னிங்  அறிமுகம், மென்திறன்கள், ப்ராஜக்ட் ப்ளானிங் அண்ட் கன்ட்ரோல் ஆகியவை அதிக அளவில் விரும்பப்படுகின்றன'' என்று கூறினார்.

என்.பி.டி.இ.எல், MOOCகள் வடிவத்தின் மூலம் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. மாணவர்கள், ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்துப் புரிந்து, வாராந்திர/ மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் விரும்பினால் இறுதித் தேர்வுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் பெற, திட்டமிடப்பட்ட நேரடித் தேர்வில் பங்குபெற குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாணவர்கள் என்.பி.டி.இ.எல் சான்றிதழ் தேர்வை முடித்தவுடன், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், தங்கள் கூடுதல் புள்ளிகளை இணைக்குமாறு  கோரலாம்.

பொறியியல், மனிதநேயம், அடிப்படை அறிவியல் மற்றும் மேலாண்மை போன்றவற்றில் பல்வேறு வகையான படிப்புகள் என்.பி.டி.இ.எல் தளங்களில் கிடைக்கின்றன. இது வரை 1.4 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துகொண்டுள்ளனர். என்.பி.டி.இ.எல் வீடியோக்களை இதுவரை ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், YouTube இல் என்.பி.டி.இ.எல் சேனல்கள் 3.1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.

மாணவர்களின் முயற்சிகளை நெறிப்படுத்துவதற்கும், ஒரு துறையில் நிபுணத்துவம் பெற அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும், என்.பி.டி.இ.எல் 'டொமைன் சான்றிதழ்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஒரு டொமைன் முக்கிய மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பி.டி.இ.எல் படிப்புகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. டொமைன் சான்றிதழைப் பெறுவதில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை. இப்போது 12 பிரிவுகளில் 51 களங்கள் உள்ளன, மேலும் 85 மாணவர்கள்  NPTEL -இன் டொமைன் சான்றிதழை இது வரை பெற்றுள்ளனர்.

என்.பி.டி.இ.எல் மூலம் பயில, வயது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மகாராஷ்டிராவின் நந்தேடில் உள்ள சாவித்ரிபாய் பூலே உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவர் ஹர்ஷ்வர்தன் பாட்டீல், என்.பி.டெல் மூலம் பயின்றவர்களில் மிகவும் இளம் மாணவர். இதில் இவர், எஃபக்டிவ் ரைட்டிங்மென்திறன் மேம்பாடு, மன அழுத்த மேலாண்மை, உயிர் வேதியியல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கில மொழி ஆகிய ஐந்து சான்றிதழ் படிப்புகளை முடித்துள்ளார்.

ஆந்திராவின் கடப்பாவைச் சேர்ந்த என்.பி.டெல் மாணவி, சிங்கம் நிர்மலா தேவி, "என்.பி.டெல் மூலம் பைத்தான் படித்தது எனக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பெற மிகவும் உதவியாக இருந்தது. இந்த படிப்பு மூலம், பைத்தானின் கருத்துக்களை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது, மேலும் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது.என்று கூறுகிறார்.

2003 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏழு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (பம்பாய், டெல்லி, கான்பூர், கரக்பூர், மெட்ராஸ், குவஹாத்தி மற்றும் ரூர்க்கி) என்பிடெல் தொடங்கப்பட்டது.

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(Release ID: 1737682) Visitor Counter : 122
Read this release in: English