சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

40-வது நிறுவன தினத்தை நபார்டு கொண்டாடியது

Posted On: 13 JUL 2021 7:12PM by PIB Chennai

தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய தமிழக அரசின் தலைமை செயலாளர் டாக்டர் வி இறையன்பு, 2021 நிதியாண்டில் நபார்டின் பங்களிப்பான ரூ 27,135 கோடி குறித்து பாராட்டு தெரிவித்ததோடு, நடப்பாண்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள ரூ 40,000 கோடி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் தான் தற்போதைய தேவை என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தின் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.

தனது நடவடிக்கைகளை நபார்டு விரிவுபடுத்தியுள்ளதாகவும், ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி உதவி ஆகியவற்றின் கீழ் மாநிலத்தின் ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை குறிப்பிடத்தகுந்த அளவு உயர்த்தியுள்ளதாகவும் நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு எஸ் செல்வராஜ் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது சிறப்பு கவனம், வங்கி கடனை உயர்த்துதல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் நபார்டு செய்துள்ள சாதனைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.

நபார்டின் மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட அளவில் உருவாக்கியுள்ள தக்கம் குறித்து ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் திரு சுமன் ரே எடுத்துரைத்தார்.

 

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை அவர்களது செயல்பாடுகளுக்காக நபார்டின் 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியன் வங்கி செயல் இயக்குநர் திரு இம்ரான் அமின் சித்திக்கின் முன்னிலையில் நபார்டு மற்றும் இந்தியன் வங்கிக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியன் வங்கியின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கினார்.

கடற்பாசி விவசாயம் குறித்து நபார்டு தயாரித்த வங்கி திட்டம் ஒன்று நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.

*************




(Release ID: 1735195) Visitor Counter : 125


Read this release in: English