சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது
Posted On:
05 JUL 2021 4:45PM by PIB Chennai
பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து இந்திய உணவு கழகத்தின் (தென் மண்டலம்) தலைமை இயக்குநர் திரு ஆர் டி நஸீம், தமிழக பொது மேலாளர் திரு ஜே எஸ் சிஜூ ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று திரு நஸீம் தெரிவித்தார்.
“கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காகவும், உணவின்றி யாரும் வாடக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கிலும், பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்திய அரசு தொடங்கியது,” என்று அவர் கூறினார்.
இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், கொரோனா இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு இந்தாண்டு நவம்பர் வரை மாண்புமிகு பிரதமரால் மேலும் நீட்டிக்கப்பட்டது என்று கூறிய திரு நஸீம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தகுதியுடைய 3.57 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி/கோதுமை ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கிடைக்கும் படி இத்திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த இரு மாதங்களாக கூடுதல் அரசியை தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷனுக்கு கொடுத்துள்ளோம். அடுத்த ஐந்து மாதங்களுக்கு (ஜூலை முதல் நவம்பர் வரை) ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை முற்றிலும் இலவசமாக வழங்க இந்திய உணவு கழகம் தயாராக உள்ளது. அவற்றை எடுத்தும் செல்லும் பணியை மாநில அரசும் தொடங்கி விட்டது என்று திரு நஸீம் கூறினார்.
தமிழ்நாட்டிற்கு சாதாரணமாகவே 3 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை தேவைப்படுவதாகவும், அதற்கு கூடுதலாக 1.78 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுவைக்கு இது வரை மூன்று கட்டங்களாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன (15 லட்சத்து 78 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 72 ஆயிரத்து 830 மெட்ரிக் டன் கோதுமை) இதற்காக இந்திய அரசு ரூ. 7588 கோடியை செலவிட்டுள்ளது.
அடுத்த ஐந்து மாதங்களில் 9 லட்சம் டன்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ. 3325 கோடி ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.
வழக்கமாக வழங்கப்படும் உணவு தானிய வகைகளை விட இது இருமடங்கு கூடுதலான அளவு என்பதால் இதன் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாபெரும் சவாலாக விளங்குகிறது. இத்தகைய சவாலை எதிர்கொண்டு ஊரடங்கு கால இக்கட்டான தருணங்களில் உணவு தானியங்களை மாநிலத்தின் அந்தந்தப் பகுதிகளில் கொண்டு சேர்ப்பதில் இந்திய உணவுக் கழகம் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு உள்ளது என்றும் அவர் விளக்கினார்.
நடப்பாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமார் 36 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்குகளில் மாநில அரசு 17 லட்சத்து 6 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் திரு நஸீம் கூறினார்.
நாடு முழுவதும் உணவு தானிய விளைச்சல் மிகச் சிறப்பாக இருப்பதால் வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 19 லட்சத்து 44 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் அரிசியும் 75 ஆயிரத்து 776 டன் கோதுமை பஞ்சாபில் இருந்தும் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக இந்த உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கையிருப்பில் 30 லட்சம் டன் தானியங்கள் உள்ளன. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்த கூடுதல் தானியங்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இயக்குநர், திரு குருபாபு பலராமன் உடனிருந்தார்.
*************





(Release ID: 1732838)