சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

”INO-PtRC ஆய்வகம் மதிகெட்டான் சோலை முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்திற்கு இடையூறு விளைவிக்காது” - பொட்டிபுரம் ஆராய்ச்சி மையத்தின் திட்ட இயக்குநர் விளக்கம்

Posted On: 02 JUL 2021 2:24PM by PIB Chennai

மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் பொட்டிபுரம் ஆராய்ச்சி மைய திட்ட இயக்குநர் பேராசிரியர் கோபிந்தா மஜூம்தார்  வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

”PtRC ஆய்வகத்தின் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 31.45 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலமானது ”தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினால் முன்மொழியப்பட்ட மதிகெட்டான் முதல் பெரியார் வரையிலான புலிகளின் வழித்தடத்தில் அமைந்துள்ளது” என்பது போன்ற உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஒரு சில ஊடகங்கள் வெளியிடுகன்றன.  இந்தத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வண்ணமும் மற்றும் இது சம்பந்தப்பட்ட உண்மை விவரங்கள் தரவும் இந்த செய்தி வெளியீட்டின் மூலம் விளக்க விரும்புகின்றோம்.

இந்த திட்டத்திற்கான 26.825 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலமானது, தரைத்தளம் சார்ந்த கட்டுமானத்திற்கும் மற்றும் 4.62 ஹெக்டேர் பரப்பளவு மலையினுள் சுரங்கப்பாதை மற்றும் ஆய்வகத்திற்கான குகை அமைக்கவும், ஒதுக்கப்பட்டதாகும்.

தரைத்தள கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட 26.825 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியானது பொது வருவாய் நிலமாகும்.  அது மட்டுமல்ல, இந்தப் பகுதியானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லைக்கு வெளியே உள்ளது என்பது மிகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்; ஆகையால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கோ அல்லது புலிகளின் வழித்தடத்திற்கோ எந்த ஒரு இடையூறும் விளையாது.

மலையின் உள்ளே அமைக்கவிருக்கும் கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்ட 4.62 ஹெக்டேரில் கிடைமட்டமான சுரங்கப்பாதை தொடர்வண்டி செல்ல வடிவமைக்கப்படும் சுரங்கப்பாதை போன்றது.  சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் பொது வருவாய் நிலத்தில் தொடங்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையை அடையும் போது மேற்பரப்பில் இருந்து பல மீட்டர் ஆழத்தினுள் கடந்து விடும்.  புலிகளின் வழித்தடமானது முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியினுள் அமைந்துள்ளது.  எந்த ஒரு கட்டுமானமும் காட்டுப் பகுதியில் நடைபெறாத காரணத்தினாலும் சுரங்கப்பாதை அமைக்கும் பகுதி மேற்பரப்பில் இருந்து பல மீட்டர் (10 முதல் 1000 மீட்டர் வரை)  மலைப் பாறையின் ஆழத்தில் சென்று விடுவதாலும், வனப்பகுதியில் உள்ள புலிகளுக்கோ மற்றும் எந்த வன உயிர்களின் நடமாட்டத்திற்கும் தடை ஏற்படாது.  சுரங்கப்பாதை மற்றும் குகைக்கான 4.62 ஹெக்டேரில் மூன்று ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி வரையறுக்கப்பட்ட புலிகளின் வழித்தடத்திற்குள் பல நூறு மீட்டர் மலையின் அடியில்  (உட்புறம்)  உள்ளது.  புலிகளின் வழித்தடம் மேற்பரப்பில் உள்ளதால் மலையினுள் அமைக்கப்படும் சுரங்கப்பாதை மற்றும் குகையானது எந்த ஒரு வகையிலும் மலையின் மேல் செல்லும் புலிகளின் வழித்தடத்தைப் பாதிக்காது என்பதை முன்னிலைப்படுத்துகிறோம்.

நாங்கள் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் PtRC ஆராய்ச்சி மையம் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியான அறிவியல் திட்டமாகும்.  அது சுற்றுச்சூழலுக்கோ அல்லது அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது.  மேலும், இந்த ஆய்வகத்தில் எந்த ஒரு அபாயகரமான கதிர்வீச்சுப் பொருளோ அல்லது விஷத்தன்மை வாய்ந்த உமிழ்வோ இல்லவே இல்லை.  இந்த அறிவியல் ஆய்வகம் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாதனை படைக்கவும், நம் நாட்டின் அடிப்படைத் தேவையான அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கவும் வித்தாக அமையும்.”

*************

 



(Release ID: 1732278) Visitor Counter : 198


Read this release in: English