சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரது பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

Posted On: 23 JUN 2021 5:59PM by PIB Chennai

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை குறிக்கும் விடுதலையின் அமிர்தம் மகோற்சவத்தின்ஒரு பகுதியாக, நாட்டின் அனைத்து விமான போக்குவரத்து பாதுகாப்பிற்கான தலைமை அமைப்பான விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் (பிசிஏஎஸ்), விமான போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகளை நடத்த தொடங்கியுள்ளது.

விமான போக்குவரத்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து முகமைகள் மற்றும் பணியாளர்களின் பணி சார்ந்த அறிவை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகத்தின் மண்டல அலுவலகம் முதல் முறையாக பிராந்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு கருத்தரங்கினை சென்னையில் நடத்தியது. பல்வேறு இடங்களில் இருந்து நேரடியாக மற்றும் காணொலி மூலமாக அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

புதுதில்லியில் உள்ள விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலக தலைமையகத்தில் இருந்து விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலக இணை தலைமை இயக்குநர் திரு ஜெய்தீப் பிரசாத் ஐபிஎஸ் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். சென்னை விமான நிலைய இயக்குநர் திரு சுனில் தத், இந்திய விமான நிலைய ஆணையத்தின் மண்டல செயல் இயக்குநர், தெற்கு மண்டலம், திரு ஆர் மாதவன், சென்னை விமான நிலைய பொது மேலாளர் - பொறியியல் (சிவில்/திட்டம்) டாக்டர் சரத் குமார் மற்றும் சென்னை விமான நிலைய ஏஎஸ்ஜி/சிஐஎஸ்எஃப் டிஐஜி திரு ஸ்ரீராம் ஆகியோர் இதில் பேசினர். ஏஎஸ்ஜி/சிஐஎஸ்எஃப் கமாண்டெண்ட் திரு ஆசிஷ் குமார் மற்றும் சென்னை விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி திரு டி சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகத்தின் மண்டல இயக்குநர் திரு எஸ் கல்யாணராமன் சிறப்புரை ஆற்றினார். விமான போக்குவரத்து பாதுகாப்பின் பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்கள் தொடர்புடைய தலைப்புகளில் காணொலி மூலம் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்றுவார்கள்.

விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலக தலைமையகம் மற்றும் அதன் 20 மண்டல அலுவலகங்களின் அதிகாரிகள், தென் மண்டலத்தில் உள்ள 13 விமான நிலையங்களின் விமான நிலைய இயக்குநர்கள் மற்றும் தலைமை பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளூர் காவல் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி விமான நிறுவனங்களின் தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் கருத்தரங்கின் அமர்வுகளில் பங்கேற்றனர்.

விமான போக்குவரத்து பாதுகாப்பு கலாச்சாரத்திற்கான சர்வதேச ஆண்டு-2021-ல் விமான போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகத்தின் இந்த நடவடிக்கை, பணி அறிவை மேம்படுத்துவதிலும், தென் மண்டலத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளின் மீது அதிக கவனம் செலுத்துவதிலும் பெரும் பங்காற்றும்.

மேற்கண்ட தகவல்கள், பெருநிறுவன தகவல் தொடர்பு துறை, இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

***



(Release ID: 1729826)
Read this release in: English