சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

“ஆயுஷ்மான் பாரத் #அனைவருக்கும் சுகாதாரம் & குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19 பாதிப்பு & எதிர்பார்க்கப்படும் பெரும்பரவலை தவிர்ப்பது எப்படி” என்பது குறித்த இணைய கருத்தரங்கு

Posted On: 11 JUN 2021 7:40PM by PIB Chennai

 “ஆயுஷ்மான் பாரத் #அனைவருக்கும் சுகாதாரம் & குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட்-19 பாதிப்பு & எதிர்பார்க்கப்படும் பெரும்பரவலை தவிர்ப்பது எப்படிஎன்பது குறித்த இணைய கருத்தரங்கை பத்திரிகை தகவல் அலுவலகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு, சென்னை உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம், கோயம்புத்தூர், 2021 ஜூன் 11 அன்று நடத்தியது.

திரு நதீம் துஃபைல், துணை இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இணைய கருத்தரங்கில் பங்கேற்றோரை வரவேற்றார். பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான இணைய கருத்தரங்கு கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான தடுப்பு மருந்து இன்னும் அறிமுகப்படுத்தப் படாததால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தொற்றில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.

அறிமுகவுரையாற்றிய திரு ஜெ காமராஜ், ஐஐஎஸ், இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை, 50 கோடிக்கும் அதிகமான ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு மருத்துவ பராமரிப்பை உறுதி செய்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல லட்சக்கணக்கானோருக்கு இத்திட்டம் உதவி, பல்வேறு மட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். சுமார் 16 கோடி பேருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் பாதிப்புகள் கவலை அளிப்பதாகவும், மூன்றாம் அலையை தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர்  கூறினார்.

தொடக்கவுரையை வழங்கிய டாக்டர் மாணிக்கம் ராமசாமி, குடும்பம் ஆரோக்கியமாக விளங்க பெற்றோர்கள் தங்கள் உடல் நலனை பேண வேண்டும் என்றார். சரியான கொவிட் நடத்தை விதிமுறையை பெற்றோர் கட்டாயம் கடைபிடித்து, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்கள் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இணைய கருத்தரங்கில் பேசிய டாக்டர் நேமிநாதன், நிர்வாக இயக்குநர், கோயம்புத்தூர் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கு ஏற்படும் கொவிட் குறித்த ஆதாரம் சார்ந்த அணுகலை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றார். நேர்மறை எண்ணத்தோடு இருக்குமாறும், பயப்பட வேண்டாம் என்றும் குழந்தைகளை அவர் கேட்டுக்கொண்டார்.

காய்ச்சல், சளி, இருமல், வறண்ட தொண்டை, சோர்வு, தலைவலி, உடல் வலி, சரியாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டுமென்றும், அவ்வாறு இருப்பவர்களை விரைந்து மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அவர், முறையான நடத்தை விதிமுறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பெற்றோர் மற்றும் குழந்தைகள் தவறாமல் கடைபிடிக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஸ்ரீனிவாசன், தலைவர், நுண்ணுயிரியல் துறை, ரத்தினம் கல்வி குழுமம், கோயம்புத்தூர், வீட்டில் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு உற்சாகமூட்டி, நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தலாம் என்றார். பல மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடைக்கும் குழந்தைகள் குறைந்தளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய விஷயங்களை கற்பதற்கு ஊக்கப்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

இணைய கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்த, கள விளம்பர அலுவலகத்தின் துணை இயக்குநர் திருமதி கரீனா பி தெங்கமம், குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோருக்கு நன்றி கூறினார்.

நன்றியுரை ஆற்றிய ரத்தினவாணி 90.8 சமூக வானொலியின் (ரத்தினம் கல்லூரி வானொலி) தலைவர் திரு முகேஷ் மோகன்குமார், இணைய கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள் தங்களது வானொலியில் ஒலிபரப்பப்பட்டு விழிப்புணர்வு உருவாக்கப்படும் என்றார்.

*************

 



(Release ID: 1726358) Visitor Counter : 48


Read this release in: English