சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கான இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 400%, சீனாவிற்கு 143% அதிகரிப்பு


கப்பல்கள், படகுகள், மிதவை கட்டமைப்புகளைத் தவிர அனைத்துப் பிரிவுகளும் நேர்மறையான வளர்ச்சி

Posted On: 22 MAY 2021 4:42PM by PIB Chennai

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 25 முக்கிய நாடுகளுள் 23 நாடுகளுக்கு பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கணிசமான வளர்ச்சி அடைந்தது. நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகம், அடிப்படை விளைவுகளினால் பெரும் உச்சத்தை எட்டியது.

இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் முதல் சிறந்த 25  நாடுகளுள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மட்டுமே எதிர்மறை வளர்ச்சி பதிவானது.

அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து சீனாவும் இந்தியப் பொறியியல் பொருட்களின் மிகப் பெரிய ஏற்றுமதித் தளமாக விளங்குகின்றன. கடந்த ஆண்டைவிட இந்த நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் எண்ணிக்கை 400 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து இதே காலக்கட்டத்தில் சீனாவிற்கான ஏற்றுமதி 143.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது.

கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவை கட்டமைப்புகளைத் தவிர அனைத்து பிரிவுகளும் இந்த காலகட்டத்தில் நேர்மறை வளர்ச்சி அடைந்தன. கொவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சி தொடர்ந்து உத்வேகம் அடைந்துள்ளது. நிதியாண்டு 21 இல் குறைந்த ஆதாரத்தின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் விகிதம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் அதன் மீள்தன்மை மிகவும் திருப்திகரமாக உள்ளது. சர்வதேச நிலவரத்தை அது பிரதிபலிக்கிறது”, என்று இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் திரு மகேஷ் தேசாய் கூறினார்.

நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்த 32 பொறியியல் சரக்கு பிரிவுகளுள் இரும்பும், எஃகும் ஏப்ரல் 2021 மாதம், கடந்த ஆண்டு இதே காலத்தை விட 210% பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்தன. அலுமினியம், துத்தநாகம், நிக்கல், ஈயம், தகரம் போன்ற இரும்பு சாரா பிரிவுகளின் ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் 110.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

தொழில்துறை உபகரணங்களின் மாத ஏற்றுமதி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 146.21 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2021 ஏப்ரல் மாதத்தில் 1174.23 மில்லியன் அமெரிக்க டாலராக சுமார் 703 சதவீதம் வளர்ச்சியை எட்டியது. மின்னணு உபகரணங்கள் பிரிவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 245.43 மில்லியன் அமெரிக்க டாலரை விட 247 சதவீதம் கூடுதலாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 853.1  மில்லியன் அமெரிக்க டாலராக பதிவானது.

விமானம், விண்கலம் மற்றும் அவற்றின் பாகங்களின் ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 24.1 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 200 சதவீதம் அதிகரித்து 2021 ஏப்ரல் மாதத்தில் 74.5 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவை கட்டமைப்புகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 677.4 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை விட நடப்பாண்டு 32.8% குறைந்து, 455.4 மில்லியன் அமெரிக்க டாலராக எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தரவுகளின் அடிப்படையில், பொறியியல் சரக்குகளின் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த ஆண்டின் 2.31 பில்லியன் அமெரிக்க டாலரை விட 229.74 சதவீதம் உயர்ந்து 7.60 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. நாட்டின் மொத்த வர்த்தகங்களின் ஏற்றுமதியில்  பொறியியல் பொருட்கள் நான்கில் ஒரு பங்கு வகிப்பதால், நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மீட்சி அடைவதில் இது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

2021 ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்த ஏற்றுமதியின் வர்த்தகம் 30.63 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.36 பில்லியன் அமெரிக்க டாலரை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஏற்றுமதி 17.62 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. பெருந்தொற்றின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தாக்கத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்தது. சர்வதேச நிலவரத்தின்படி இந்தியாவின் வெளிநாடுகளுக்கான வர்த்தகம் வலுவான மீள் தன்மையை எடுத்துரைக்கிறது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் நாட்டின் வர்த்தகம் 400 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

அந்நிய வர்த்தகக் கொள்கை உள்ளிட்ட முக்கிய வர்த்தக கொள்கைகளின் வாயிலாக நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், ஏற்றுமதி சமூகத்திற்கு பெரும் உதவிகரமாக இருப்பதாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் திரு தேசாய் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி பற்றி நம்பிக்கை தெரிவித்த திரு தேசாய், பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் கடந்த சில வாரங்களாக அதிகரிக்கும் பாதிப்புகளால் ஐயம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படையாத வகையில் மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், வர்த்தகங்கள் முழுவதும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. எனவே ஏற்றுமதியாளர்களுக்கு போதிய ஆதரவை அரசு அளிப்பது மிகவும் முக்கியம்”, என்று தேசாய் தெரிவித்தார்.

*************

 


(Release ID: 1720884) Visitor Counter : 94


Read this release in: English