சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

337 கிலோ ஹெராயின் போதைமருந்து கடத்திய இலங்கை படகு இந்திய கடற்படையால் சுற்றிவளைப்பு

प्रविष्टि तिथि: 22 APR 2021 7:34PM by PIB Chennai

உளவுத் தகவலின் அடிப்படையில், இலங்கை மீன்பிடி படகான டியு ஷஷிலாவை இந்திய கடற்படை சென்ற வாரம் நடுக்கடலில் இடைமறித்தது. படகும், அதிலிருந்த இலங்கையினரும் 2021 ஏப்ரல் 19 அன்று கொச்சியில் உள்ள மட்டன்சேரி தளத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், போதைமருந்து தடுப்பு பிரிவின் சென்னை அதிகாரிகள் கடற்படையிடமிருந்து அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், மொத்தம் 337 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 340 பொட்டலங்களில் 'கிங் 2021' எனும் முத்திரையுடன் படகுக்குள் அவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பலுச்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் இரான் எல்லைகளில் அமைந்துள்ளஆப்கானிஸ்தான் ஹெராயினின் மையமாக கருதப்படும் மக்ரான் கடற்கரையில் மற்றொரு படகில் இருந்து பெறப்பட்ட ஹெராயின், டியு ஷஷிலா மூலம் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை பகுதிகளுக்கு கடத்தப்படுவது விசாரணையில் தெரிய வந்தது.

போதைப்பொருள் பறிமுதல், வலுவான ஆதாரங்கள் மற்றும் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில், எம் விமலஸ்ரீ, எம் சோமஸ்ரீ, எச் ஏ பெய்ரிஸ், டபுள்யூ பெரைரா மற்றும் ஏ பெரைரா ஆகிய ஐந்து இலங்கை மாலுமிகள் இந்திய கடல் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில வருடங்களாக ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்த வழியின் மூலம் இலங்கையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் கடத்தல் நடைபெறுகிறது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் கடந்த ஆறு மாதங்களில் இது போன்று நான்கு பறிமுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே, கண்காணிப்பாளர் திரு சுரேஷ் குமார் மற்றும் இதர அலுவலர்களை அவர்களது அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு பாராட்டுகிறது.

மேற்கண்ட தகவல்களை செய்திக் குறிப்பு ஒன்றில்  போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே தெரிவித்துள்ளார்.

***



(रिलीज़ आईडी: 1713462) आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English