சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
2019, 2020-ஆம் ஆண்டுகளுக்கான தபால்தலைத் தொகுப்பு வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2021 3:12PM by PIB Chennai
தபால்தலை ஆண்டு தொகுப்பு பற்றி தபால்தலை சேகரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் சிறப்பு தபால்தலை மையம், இம்மாதம் 22 ஆம் தேதியன்று 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான தபால்தலைத் தொகுப்புகளை வெளியிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருப்பொருள்களில் தபால்தலைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கிவருகிறது. தபால்தலை சேகரிக்கும் பழக்கத்தை பள்ளிக் குழந்தைகளிடையே ஏற்படுத்தி, அதன் மூலமாக அறிவைப் பெருக்குவதே இந்திய அஞ்சல் துறையின் குறிக்கோளாகும். ஆண்டின் மத்தியில் தபால்தலை டெபாசிட் கணக்கைத் துவக்குபவர்களுக்கு தங்களது கணக்குகள் தொடங்கப்படுவதற்கு முன்பே தபால் தலைகளின் தேவை ஏற்படுகிறது. மேலும், தபால்தலை ஆண்டு தொகுப்பில் தபால் தலை சேகரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தொகுப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் திரு பி செல்வகுமார், 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான, தபால்தலை சேகரிப்பாளர்களுக்கான தொகுப்பை வெளியிட, சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி சுமதி ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.
2019-ஆம் ஆண்டுக்கான தபால் தலைகளின் தொகுப்பு ரூ. 1350-க்கும், 2020-ஆம் ஆண்டுத் தொகுப்பு ரூ. 420-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் பயனடைவதுடன், தபால் தலை சேகரிப்பை ஓர் பயனுள்ள பொழுதுபோக்காக குழந்தைகளிடையே உருவாக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த தபால்தலை தொகுப்புகள் விற்பனை செய்யப்படும்.
இந்தத் தகவல் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தின் முதன்மை அஞ்சலக அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************
(வெளியீட்டு அடையாள எண்: 1706894)
வருகையாளர் எண்ணிக்கை : 159