தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தேர்தல்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று வாக்குப்பதிவு, மே 2 வாக்கு எண்ணிக்கை

Posted On: 26 FEB 2021 6:36PM by PIB Chennai

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெறும், மே 2 அன்று வாக்குகள் எண்ணப்படும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான அறிவிப்பு 2021 மார்ச் 12 அன்று வெளியிடப்படும்.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 19 ஆகும். மார்ச் 20 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22 ஆகும். வாக்குப்பதிவு ஏப்ரல் 6 அன்று நடைபெற்று, வாக்குகளின் எண்ணிக்கை மே 2 அன்று நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் மே 5 அன்று நிறைவுறும்.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

வாக்களர்களின் எண்ணிக்கையை பொருத்தவரை, தமிழ்நாட்டில் 6,27,47,653 பொது வாக்காளர்கள், 72,853 சேவை வாக்காளர்கள், 3,243 வெளிநாட்டு வாக்காளர்கள் என மொத்தம் 6,28,23,749 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுச்சேரியில் 10,01,934 பொது வாக்காளர்கள், 303 சேவை வாக்காளர்கள், 352 வெளிநாட்டு வாக்காளர்கள் என மொத்தம் 10,02,589 வாக்காளர்கள் உள்ளனர்.

2016-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 24,890 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட்ட நிலையில், 2021 தேர்தலில் 88,936 வாக்குப்பதிவு மையங்கள் செயல்படும். இது 34.73 சதவீதம் அதிகமாகும்.

2016-ம் ஆண்டு புதுச்சேரியில் 930 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட்ட நிலையில், 2021 தேர்தலில் 1,559 வாக்குப்பதிவு மையங்கள் செயல்படும். இது 67.63 சதவீதம் அதிகமாகும்.

கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு, விரிவான விதிமுறைகள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் பின்பற்றப்படும். மேலும், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

பரப்புரைகளின் போதும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஐந்து பேருக்கு மேல் (வேட்பாளர் உட்பட) வீடுகளுக்கு சென்று பிரச்சாரம் செய்யக்கூடாது. கொவிட் விதிமுறைகளைப் பின்பற்றி உரிய அனுமதியோடு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1701166

 

*****************



(Release ID: 1701194) Visitor Counter : 267