சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் ‘பொன்விழா ஆண்டு வெற்றி ஓட்டம்’: சென்னையில் ராணுவ தலைமையகம் நடத்தியது

Posted On: 21 FEB 2021 3:55PM by PIB Chennai

1971  இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொன்விழா ஆண்டு வெற்றி ஓட்டம்நிகழ்ச்சியை சென்னையில் உள்ள ராணுவ தென்னிந்திய தலைமையகம் இன்று நடத்தியது.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் 50வது ஆண்டு நிகழ்ச்சி, பொன் விழா வெற்றி ஆண்டாக நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக  உங்கள் வீரர்களுக்காக ஓடுங்கள்என்ற கருப்பொருளில், பொன்விழா வெற்றி ஓட்டத்தை, சென்னையில் உள்ள ராணுவ தென்னிந்திய தலைமையகம் இன்று நடத்தியது.

2 கி.மீ, 5 கி.மீ, 10 கி.மீ என 3 பிரிவுகளில் இந்த வெற்றி ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் ராணுவ வீரர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் உற்சாகமாக கலந்து கொண்டு ஓடினார்கள்.

தமிழக தலைமை செயலாளர் திரு. ராஜீவ் ரஞ்சன், எஸ்ஐபி சிறப்பு இயக்குனர் திரு. ஏ.எஸ் ராஜன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். 

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று வீர் சக்கரா விருது பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் ஏ.கிருஷ்ணசாமி இந்த வெற்றி ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் ராணுவ தென்மண்டல தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ராணுவ இசை குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ராணுவ ஆயுதங்கள், குதிரைகள் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.



(Release ID: 1699775) Visitor Counter : 84


Read this release in: English