சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

டிஜிட்டல் எடைக் கருவிகளில் ஒளித்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ 5.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல், இருவர் கைது

Posted On: 09 FEB 2021 6:46PM by PIB Chennai

போதை பொருட்கள் கடத்தல் குறித்து கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், விமான சரக்குகள் ஏற்றுமதி மையத்தில் தோஹாவிற்கு (கத்தார்) அனுப்பப்பட வேண்டிய சரக்கு ஒன்றை சென்னை விமான சரக்குகள் சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

அதன் ரசீதில் 7 பொட்டலங்களில் 55 எடைக்கருவிகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்து சோதித்த போது, எடைக்கருவிகள் வழக்கத்தை விட அதிக எடையில் இருந்தன. இதைத் தொடர்ந்து எடைக்கருவிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சோதனையின் போது, அவற்றில் ரகசிய பெட்டகங்கள் இருந்ததும், அவற்றுக்குள் போதை மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 44 கிலோ எடையுள்ள ரூ 4.4 கோடி மதிப்பிலான ஹாஷிஷ் எனப்படும் போதைப்பொருளும், ரூ 70 லட்சம் மதிப்புடைய மெத்தாபெட்டமைன் என்னும் போதைப்பொருளும் தேசிய போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத, ஆனால் வெளிநாடுகளில் கட்டுப்பாடுகளின் கீழ் வரும் பிரெகாபலின் காப்சூல்கள் 1,620 கிராமும் கைப்பற்றபப்ட்டது.

ஏற்றுமதியாளரான ஸ்ரீஆலயா நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டு, ஏற்றுமதியாளர் கைது செய்யப்பட்டார். சுங்க அலுவலக முகவரின் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாக சென்னை விமான சரக்குகள் சுங்கத்துறை ஆணையர் செய்தி குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

*****************



(Release ID: 1696582) Visitor Counter : 59


Read this release in: English