குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

எந்தவிதமான தாமதமும், தடையும் இல்லாமல் மக்களை வளர்ச்சி முழுமையாக சென்றடைய வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்


இதர மக்கள் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதாரணமாக இருக்க வேண்டும் - குடியரசு துணைத் தலைவர்

Posted On: 05 FEB 2021 6:37PM by PIB Chennai

எந்தவிதமான தாமதமும், நீர்த்தலும், திசைதிருப்பலும் இன்றி மக்களை வளர்ச்சி முழுமையாக சென்றடைவதை அரசுகளும், மக்கள் பிரதிநிதிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.

கவர்ச்சிகரமான விஷயங்களில் கவனம் செலுத்துவதை காட்டிலும், மக்களின் வளர்ச்சி சார்ந்த தேவைகளில் அவர்களுக்கு வழிகாட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ராஜஸ்தானில் நாடாளுமன்ற தூதுவர்என்னும் தலைப்பிலான புத்தகத்தை காணொலி மூலம் வெளியிட்டு பேசிய குடியரசு துணை தலைவர், கிராமங்களை மாதிரி கிராமங்களாக மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு நிதியை பயன்படுத்துமாறு  கேட்டுக்கொண்டார். டாக்டர் கே என் பண்டாரியால் எழுதப்பட்ட இப்புத்தகம், டாக்டர் அபிஷேக் சிங்வியின் பரிந்துரைகளின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் 12 வருடங்கள் (2006 முதல் 2018) வரை மேற்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் கல்வி திட்டங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது.

தங்களது தொகுதிகளுக்கு சேவையாற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குவதை தனது லட்சியமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு நிதி கொண்டுள்ளது என்று கூறிய திரு நாயுடு, 1993-ல் தொடங்கப்பட்டதில் இருந்து 19 கோடிக்கும் அதிகமான பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சொத்துக்களை உருவாக்க இத்திட்டம் உதவியுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மூன்றாம் நபர் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கும்  அரசின் முடிவை அவர் பாராட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளை ஏற்று, உரிய நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாடு நிதியின் கீழான பணிகளை நிறைவு செய்யுமாறு மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை திரு நாயுடு கேட்டுக்கொண்டார்.

அவைகளில் நடைபெறும் விவாதங்களின் தரமும், மக்களிடையே அரசியல்வாதிகளுக்கு உள்ள மதிப்பும் குறைந்து வருவதாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காத்து, தங்களது கடமையை சிறப்பாக செய்ய வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை என்றார். “இதர மக்கள் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர் திரு தாவர்சந்த் கெலோட், மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் திரு குலாம் நபி ஆசாத், டாக்டர் அபிஷேக் சிங்வி மற்றும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

*****



(Release ID: 1695697) Visitor Counter : 112