சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ரூ. 4.30 கோடி மதிப்பிலான 8.45 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க துறையினர் பறிமுதல். 9 பேர் கைது

Posted On: 23 JAN 2021 6:23PM by PIB Chennai

உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில், துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட் 8515, எமிரேட்ஸ் ஈகே 542 ஆகிய விமானங்களில் சென்னை வந்த 4 பெண்கள் உட்பட 17 பயணிகள் தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் அவர்களை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் நடைபெற்ற சோதனையில் 9.03 கிலோ எடையிலான தங்கப்பசை அடங்கிய 48 பொட்டலங்கள் அவர்களது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ. 3.93 கோடி மதிப்பில் 7.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது உடமைகளை சோதனையிட்டதில் அவர்கள் அணிந்திருந்த முழுக்கால் சட்டையின் பாக்கெட்களிலும், கைபைகளிலும் 386 கிராம் எடையிலான 12 தங்க வெட்டுத் துண்டுகளும், 74 கிராம் எடையிலான ஓர் தங்கச் சங்கிலியும் மறைத்து வைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தமாக அவர்களிடமிருந்து ரூ. 4.16 கோடி மதிப்பில் 8.18 கிலோ தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு பெண் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

மற்றொரு வழக்கில் இண்டிகோ 68245 என்ற விமானத்தில் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலந்தர் இலியாஸ் (28) என்பவர் விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனையிட்டதில் 310 கிராம் எடைக்கொண்ட  தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைத்திருப்பதை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். ரூ. 14 இலட்சம் மதிப்பில் 271 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின்கீழ் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக ரூ. 4.30 கோடி மதிப்பில் 8.45 கிலோ தங்கத்தை 18 வழக்குகளில் சென்னை விமானநிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்ததோடு ஒரு பெண் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

**********************

 




(Release ID: 1691655) Visitor Counter : 55


Read this release in: English