சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய குழந்தை சுகாதாரத் திட்ட மருத்துவர்கள் அம்மா சிறு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவுள்ளனர்
திருச்சிராப்பள்ளியில் 58 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்படவுள்ளன
Posted On:
24 DEC 2020 1:15PM by PIB Chennai
குழந்தைகளின் சுகாதாரத்தைக் கண்காணிக்கவும், மற்றும் ஆரம்பகால மருத்துவச் சேவைகளை அளிக்கவும் ‘ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய கார்யகிரம்’ என்ற தேசிய குழந்தைகள் சுகாதாரத் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கியது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் நிலவும், 30 சுகாதார நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிப்பது இதில் அடங்கும். பிறவிக் குறைபாடுகள், குழந்தைகளிடம் ஏற்படும் நோய்கள், குறைபாடு நிலைமைகள் மற்றும் ஊனம் உள்ளிட்ட வளர்ச்சித் தாமதங்கள் ஆகியவை இந்த நிலைமைகள். குழந்தை சுகாதாரக் கண்காணிப்பு மற்றும் ஆரம்ப கால மருத்துவச் சேவைகள் ஆகியவை குறைபாடுகளைக் குறைத்து, வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. பிறப்பிலிருந்து குழந்தைப் பருவம் வரை தொடர் கவனிப்பு வழங்குவதும் இதன் நோக்கம். தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் சுகாதாரத்தை உறுதி செய்து, இலவச மருத்துவச் சேவைகளை உறுதி செய்வது தான் இதன் நோக்கம்.
தேசிய குழந்தை சுகாதாரத் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தமிழகம் முழுவதும் திறக்கப்படும் புதிய அம்மா சிறு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவுள்ளனர். தமிழகம் முழுவதும் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்படுவதை முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும், 58 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும். 3 அம்மா சிறு மருத்துவமனைகள், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு வெல்லமண்டி என்.நடராஜன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி ஆகியோரால் புதன் கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. புதிய அம்மா சிறு மருத்துவமனைகள், சங்கிலியாண்டபுரம் மற்றும் திருச்சி மாநகராட்சி தேனூரில் உள்ள அண்ணா நகர், மணிகண்டத்தில் உள்ள தாயனூர் ஆகிய இடங்களில் செயல்படும். திருவெறும்பூர், மணிகண்டம், ஆனந்தநல்லூர், மணச்சநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியாபுரம் போன்ற திருச்சி ஊரகப் பகுதிகளிலும் அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும். சனிக்கிழமை தவிர மற்ற வேலை நாட்களில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா சிறு மருத்துவமனைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் மற்றும் நகரப் பஞ்சாயத்து மற்றும் ஊரகப் பகுதிகளில், இது காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும். ஒவ்வொரு மருத்துவமனையிலும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பர்.
**********


(Release ID: 1683312)