சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டம்: டிசம்பர் 25 அன்று 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 பிரதமர் வழங்க உள்ளார்
Posted On:
23 DEC 2020 3:19PM by PIB Chennai
டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை அன்று பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000 பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ரூபாய் இரண்டாயிரம் என மொத்தம் ரூ.18ஆயிரம் கோடி செலுத்தப்படும். முன்னாள் பிரதமர் திரு. ஏ. பி. வாஜ்பாயின் பிறந்த நாளான அன்று விவசாயிகளுடன் காணொலி மூலம் பிரதமர் உரையாட உள்ளார். இந்த வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இத்திட்டத்தின் முதல் இரண்டு தவணைகள் வழங்கப்பட்டன. பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித்திட்டத்தின் மூன்றாவது மற்றும் கடைசித் தவணை இதுவாகும்.
பிரதமர் திரு.நரேந்திர மோடியால் 2019-ஆம் ஆண்டு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதி (பி எம் - கிசான்) தொடங்கப்பட்டது. ஒரு சில விலக்குகளைத் தவிர, நாட்டிலுள்ள விளைநிலம் வைத்துள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் நிதி ஆதரவை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கப்பட்ட புதிதில் (பிப்ரவரி 2019), 2 ஹெக்டேர் அளவுக்கு நிலம் வைத்துள்ள சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டுமே பலன்கள் அனுமதிக்கப்பட்டன. பின்னர் ஜூன் 2019-இல் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, நிலத்துக்கான உச்சவரம்பு எதுவும் இல்லாமல் அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் இதன் பலன்கள் நீட்டிக்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இந்த வருடம் ஆகஸ்டு 9 அன்று, 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளுக்கு பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.17,000 கோடி செலுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார். முதல் தவணையாக ரூ.2000 ஏப்ரல் மாதத்திலேயே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் தலா ரூ.2000 என வருடத்துக்கு ரூ.6000 விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இயற்கையைப் பெரிதும் நம்பி விவசாயம் உள்ளதால் தங்களது செலவுகளை எதிர்கொள்வதற்குப் போராடும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இத்திட்டம் அமைந்துள்ளது. பொதுமுடக்கத்தின் போது கூட விவசாயிகளின் துயரங்களைக் களைவதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் பணம் கிடைப்பது குறித்து திருச்சிராப்பள்ளியில் உள்ள விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர். கொரோனா பொது முடக்கத்தின் போது தற்சார்பு இந்தியாவுக்காக பிரதமர் விடுத்த அறைகூவல் விவசாயிகளால் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடினமான நேரத்தில் உணவுப் பாதுகாப்பில் நம்மைத் தற்சார்பு அடையச் செய்து, கோவிட்டை எதிர்த்துப் போராடுவதில் அரசுக்கு உதவியாக விவசாயிகள் இருந்தனர்.
********************


(Release ID: 1682988)
Visitor Counter : 98