சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் உருவாக்கப்படலாம்: டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை

Posted On: 16 DEC 2020 6:50PM by PIB Chennai

தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், நீர்ப்பாசன மேலாண்மையும் மேம்படுத்தப்படும். ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் போன்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வாயிலாக தென்னிந்தியாவில் வெட்டுக்கிளியின் தாக்குதல் தடுக்கப்பட்டது என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் உள்ள டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘தற்சார்பு இந்தியாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த வலைதளக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். வரும் 22-25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ முன்னிட்டு இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் தொகை எண்ணிக்கையும், உலக உணவு தானியங்களின் உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில், நில அளவு குறைதல், தண்ணீர் தட்டுப்பாடு, பணியாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் எழுவதாக அவர் தெரிவித்தார். இவற்றை சரி செய்வதற்கும், வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பதற்கும், இதர வேளாண் பணிகளுக்கும் ட்ரோன் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். எனினும், இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு  அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வாழைத் தண்டிலிருந்து நாரெடுத்து அதிலிருந்து உபயோகப்படுத்துவதற்கு ஏற்றவகையில் பல பொருட்களை தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் வாழை மரங்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தத் துறையில் அபரிமிதமான வாய்ப்பு இருப்பதாகவும், இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தினார்.  பொதுவாக வாழை நாருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் இதனை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பெரும் வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகள் சமூகத்தையொட்டி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய டாக்டர் அண்ணாதுரை, பல்வேறு பெரும் பிரச்சினைகளுக்கு செயற்கைக்கோள்கள் வாயிலாக தீர்வுகள் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். உதாரணத்திற்கு இந்திய மீனவர்கள் கடல் எல்லைகளைக் கடந்து இலங்கையினுள் நுழைவதைத் தடுக்கும் வகையில் செயற்கைக்கோள்களின் மூலம் எல்லை வரையறை, இந்திய ல்லையில் மீன்களின் இருப்பு, வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை பிராந்திய மொழிகளில் வழங்குவது மீனவர்களுக்குப் பெரும் பயனளிக்கும் என்றார் அவர். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் புதுமையான தீர்வுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.  

வளர்ந்து வரும் உலகில் தற்சார்பை தாண்டிய வளர்ச்சியை இந்தியா அடைவதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறது. நம் நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால் வேறு எங்கும் செல்லாமல் இந்தியாவிலேயே ஒருவர் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தலாம். தேவை ஏற்பட்டால் பிற நாட்டு மக்களும் இங்கு வரலாம். இந்திய விண்வெளித் துறை, நாட்டின் திறன் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது”, என்று அவர்  கூறினார். நிஜ வாழ்விலும், பல்வேறு பொருட்களின் தயாரிப்பின் போதும் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மற்றும் பொருளாதாரம் மட்டுமே புதுமையான கண்டுபிடிப்பை வெற்றியடையச் செய்யாது என்றும், சமூகத்தினிடையே அந்தக் கண்டுபிடிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

நமது பல்வேறு செயற்கைக் கோள்களும் தொழில்நுட்பங்களும், பாதுகாப்பான தற்சார்பு இந்தியாவை உறுதிசெய்துள்ளது என்றார் அவர். வானிலை போன்ற துறைகளில் சர்வதேச சமூகத்தின் நல்வாழ்விற்காக இந்தியா  தொடர்ந்து உதவி வருகிறது என்றும் ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி அந்த நாடுகளில் வானிலை அறிவிப்புகளை   வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் இந்தத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்திருப்பதுடன் நமது அறிவியல் தொழில்நுட்பத்தை உலக நன்மைக்காகப் பயன்படுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

வளர்ந்து வரும் புதுமையான கண்டுபிடிப்பு கலாச்சாரம் ஓர் தத்துவம் அல்ல என்று கூறிய டாக்டர் அண்ணாதுரை, தற்போதைய சூழலியல் புதுமையான கண்டுபிடிப்புக்கு உகந்ததாக இருப்பதாகவும், முறையான நடைமுறைப்படுத்தலினால் இந்த கலாச்சாரத்தைச் செயல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார். கல்வியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொழில்முனைவோர், சாமானிய மக்கள், அரசு கொள்கைகள் மற்றும் நிதி உதவியின் ஆதரவுடன் நீடித்த புதுமையான கலாச்சாரத்தையும், தற்சார்பு இந்தியாவையும் உருவாக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா நடத்தப்படுவதாகக் கூறிய டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, தற்சார்பு இந்தியா மற்றும் உலக நன்மைக்கு அறிவியல் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு திருவிழா கொண்டாடப்படவிருப்பது வேளாண்மை, பாதுகாப்பு, அறிவியல் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் நாடு தற்சார்பு அடைவதை  குறிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார். நாட்டுக்காகவும் சர்வதேச சமூகத்திற்காகவும் ஒவ்வொரு இந்தியனும் பங்களிக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா அண்ணாதுரை, இந்த கருத்தரங்கில் அறிமுக உரை வழங்கினார்.

***



(Release ID: 1681230) Visitor Counter : 100


Read this release in: English