சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான நிலையத்தில் 3.15 கிலோ தங்கம் பறிமுதல்

Posted On: 29 NOV 2020 7:59PM by PIB Chennai

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னை வரும் விமானங்களில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நவம்பர் 28ம் தேதி இரவு முதல் 29ம் தேதி காலை வரை சுங்கத்துறையின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த முகமது ஐசக், சென்னையைச் சேர்ந்த சாதிக் அலி, முகமது நாகூர் ஹனிபா ஆகியோர் துபாயில் இருந்த வந்த ஒரு விமானத்தில் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த எல்சிடி மானிட்டரில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.36 கிலோ எடையுடன் கூடிய  தங்க தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த சிவகங்கை மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அவர்களும் எல்சிடி மானிட்டர்கள் மற்றும் பைகளில்  28 தங்க தகடுகள், 10 மெல்லிய தங்க தகடுகளை மறைத்து வைத்திருந்தனர். அவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் எடை 1.62 கிலோ.

துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுபர் ஆசிக் என்பவரிடம் சோதனை செய்ததில், 3 பிளாஸ்டிக் பைகளில் தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் இருந்து 165 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது.

மொத்தம் 3.15 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.1.57 கோடி என சென்னை சர்வதே விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

*******************



(Release ID: 1677054) Visitor Counter : 109


Read this release in: English