சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு


எதிர்பாராத பயிர் இழப்பீட்டை தவிர்க்க, திருச்சி விவசாயிகள் உடனடியாக பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு பிரிமியத்தை செலுத்துமாறு வலியுறுத்தப்படுகின்றனர்

Posted On: 21 NOV 2020 3:26PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்று, அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய நாட்டுக்கு உதவும் விவசாயிகளின் விரிதிறனை காட்டியுள்ளது. பொது முடக்க காலத்திலும், விவசாயிகள் கடின உழைப்பை மேற்கொண்டதால், உணவு தானிய விநியோகம் தடையின்றி நடைபெற்றது. அதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்கிலான தன்னிறைவு இந்தியா திட்டத்துக்கு விவசாயிகள் உதவியுள்ளனர். பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு, இயற்கை சீற்றங்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதலால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கிறது. எதிர்பாராத இழப்புகளைத் தவிர்க்க, பயிர் காப்பீட்டு பிரிமியத்தை செலுத்துமாறு, விவசாயிகள் இடையே விழிப்புணர்வை வேளாண் அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

பிரதமரின் பசல் பீமா யோஜனா ( பிஎம்எப்பிஒய்) 2016 கரீப் பருவத்தில் இருந்து தொடங்கப்பட்டது. குறைந்த பிரிமியத்துடன் கூடிய பயிர் காப்பீடு வழங்கி, வேளாண் உற்பத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. எதிர்பாராத வகையில், ஏற்படும் பயிர் இழப்பு/சேதம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிதி ஆதரவு வழங்கி, வேளாண் துறையில் நிலையான உற்பத்திக்கு உதவுவதை பிஎம்எப்பிஒய் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுமையான மற்றும் நவீன வேளாண் நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். குறுகிய கால பருவ வேளாண் நடவடிக்கை கடன்கள்/ குறிப்பிட்ட பயிர்களுக்கான கிசான் கடன் அட்டைகளுக்கு அனுமதிக்கப்பட்ட விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். 2017 கரீப் பருவம் முதல் பயிர் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சராசரி விளைச்சலுக்கு ஏற்ப, நிதி அளவை நிர்ணயிப்பது மாநிலங்களின் விருப்பமாகும். இதற்கு ஏற்ப பிஎம்எப்பிஒய் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாசனமற்ற பயிர்களுக்கு மத்திய அரசு மானியம் 30 சதவீதமாக இருக்கும். பாசனப் பகுதிகளுக்கு அது 25 சதவீதமாகும். வேளாண் பயிர்க் கடன்கள் பெற்றுள்ள விவசாயிகள், அதே வங்கியிலேயே காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், நெல், பருப்பு வகைகள், வேர்க்கடலை, சோளம் மற்றும் சிறு தானியங்களுக்கு காப்பீட்டு தொகையில் 2 சதவீதம் மட்டும் செலுத்த வேண்டும். பருத்தி பயிர்களுக்கு மொத்த காப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில், பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை, ரூ.1899 கோடிக்கு 2.88 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான வேளாண் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. செலுத்தப்பட்ட மொத்த பிரிமியத் தொகை ரூ.667 கோடியில், மத்திய அரசு ரூ.222 கோடியும், தமிழக அரசு ரூ.416 கோடியும், விவசாயிகள் ரூ.28.89 கோடியும் செலுத்தியுள்ளனர். மனச்சநல்லூர் வட்டாரத்தில், சம்பா சாகுபடி சுமார் 2250 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனச்சநல்லூர் வட்டாரம், திருவாச்சி கிராமத்தில், உதவி இயக்குநர் ( பயிர் காப்பீடு) திரு. குப்புசாமி தலைமையில் திருச்சி வேளாண் அதிகாரிகள், பிரதமர் பசல் பீமா யோஜனா பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவர்கள், பயிர் காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் பற்றி விளக்கினர். குறிப்பாக இயற்கை பேரிடர்கள், பூச்சிகள் தாக்குதலால் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை இது ஈடுகட்டும் என அவர்கள் தெரிவித்தனர். சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பிஎம்எப்பிஒய் திட்டத்துக்கான பிரிமியம் தொகையை நவம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேளாண் கடன்கள் பெறாத விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள், பொதுத்துறை வங்கிகளை அணுகி, ஏக்கருக்கு ரூ.511.50 செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக திரு குப்புசாமி தெரிவித்தார். விவசாயிகள், ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புத்தக நகல், நில உரிமை விவரங்களை வழங்க வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உதவி வேளாண் அதிகாரி திரு பார்த்திபன் கூறினார். உதவி வேளாண் அதிகாரிகள் பாஸ்கர், ஆனந்த் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.

பிஎம்எப்பிஒய் பயிர் காப்பீட்டு திட்டம், இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும். அரசு திட்டங்களை விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி, நிலையான, அதிக வருமானம் ஈட்ட வேளாண் அதிகாரிகள் உதவி வருகின்றனர்.

-------



(Release ID: 1674702) Visitor Counter : 619


Read this release in: English